நம்மை நாம் அறிந்துகொள்ள, நமது முன்னோர்களை அறிய, நம் சமூகத்தைத் தெரிந்துகொள்ள வரலாறு அவசியம். நம் தமிழ்ச்சமூகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறு சீரும் சிறப்பும் பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சித்திறனும், அவர்கள் வளர்த்த கலையும் இன்னும் உயிர்ப்போடு உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலம் பொற்காலமாக இருந்துள்ளது. சங்ககால பாண்டியர், இடைக்கால பாண்டியர், பிற்கால பாண்டியர் என பாண்டிய அரசுகள் தொன்மைமிக்க, பெரும் புகழ்மிக்க அரசாக இருந்துள்ளது. கல்வெட்டுக்களின் மூலமாகவும், பாறை ஓவியங்கள் வாயிலாகவும், நினைவுத் தூண்கள், காலத்தால் அழியாத கோயில்கள் வழியாகவும் பாண்டியர்களின் பெருமையை நாம் அறியலாம்.
தமிழகத்தில் பல்லாண்டு காலமாக ஆட்சி புரிந்த பாண்டியர்கள், வரலாற்றின் அரங்கில் இருந்து மறைக்க முடியாதவர்கள். வல்லமை வாய்ந்த பாண்டியர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் தந்திருக்கிறார் நூலாசிரியர் ம.இராசசேகர தங்கமணி. இந்நூலில் பாண்டியர்கள் யார்? பாண்டியர் ஆட்சிகாலத்தில் தமிழகத்தின் நிலை என்ன? பாண்டியர்கள் புரிந்த போர்கள் எத்தகையவை? பாண்டியர் ஆட்சியில் நிலவிய அரசியல் சூழல் எப்படிப்பட்டது? என பல்வேறு தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறார் ஆசிரியர். பாண்டிய மன்னர்களின் வீரம், கொடை, காதல், வாழ்வு, சடங்குகள் என அத்தனை அம்சங்களும் ஒருசேர இந்நூலில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு.
இதுதவிர பாண்டிய பேரரசு குறித்து அயல்நாட்டு வணிகர்கள், பயணிகள் குறிப்பாக மெகஸ்தனிஸ், மார்க்கோபோலோ, பிளினி போன்றவர்களின் குறிப்புகள் போன்றவற்றையும் இந்நூலில் காணலாம். ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாக இந்நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. வரலாற்றை வாசியுங்கள். பாண்டியரின் மெய்கீர்த்தியை அறியுங்கள்.
Be the first to rate this book.