நமது பேரண்டம் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருவெடிப்பால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. அன்றிலிருந்து நமது பேரண்டத்தின் திரள்கள் விரிந்து சென்று கொண்டேயுள்ளன. அவை விரிந்து சென்று கொண்டிருக்கும் வரைதான் உயிரினங்கள் வாழமுடியும். அவை ஒருகாலத்தில் சுருங்கத் தொடங்கும். அவை சுருங்கத்தொடங்கிய பின் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்காது என அறிவியல் அறிஞர் இசுடிபன் ஆக்கிங் கூறியுள்ளார். பூமியில் உயிரினங்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகள் ஆகிறது எனினும், மனித நாகரிகத்தின் காலம் 10,000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் முதல் நாகரிகமான சுமேரிய நகர அரசுகளின் நாகரிகம் யூப்ரடிசு, டைகிரிசு ஆறுகள் ஓடும் மெசபடோமியா பகுதியில் தோன்றியது. இப்பகுதியில் அதன்பின் அக்கேடியன், பாபிலோனியா, அசீரிய, பாரசீக, மிட்டணி, பார்த்திய, சசானிய நாகரிகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. அதேபோன்று எகிப்திலும், சிந்து சமவெளியிலும், சீனாவிலும், கிரீட் தீவிலும் நாகரிகங்கள் தோன்றின.
கிரீட் தீவின் மினோன் நாகரிகத்தின் தொடர்ச்சியாகவே கிரேக்கர்களின் மைசீனியன் நாகரிகமும் கிரேக்க நாகரிகமும், உரோம் நாகரிகமும் தோன்றின. மத்தியதரைக் கடலின் கிழக்கே பொனீசியர்களின் நாகரிகமும், யூதர்களின் இசுரவேல் நாகரிகமும் தோன்றின. ஆசியாவின் வடகிழக்கே சப்பான், கொரிய நாகரிகங்களூம். இந்தியாவின் தெற்கே உலகின் முதல் இரும்புக்கால நாகரிகமான பழந்தமிழர் நாகரிகமும் தோன்றின. அமெரிக்காவில் அல்மெக், மாயன், அசுடெக், இன்கா போன்ற பல நாகரிகங்கள் தோன்றின.
இவை போன்ற 15க்கும் மேற்பட்ட பண்டைய நாகரிகங்கள் குறித்து (வரைபடங்களுடன்) இந்நூல் சுருக்கமாகப் பேசுகிறது. மேலும் உலக மொழிகள், அவைகளின் எழுத்துக்கள் ஆகியன குறித்தும், உலக நாகரிகங்களின் வரலாறு தரும் படிப்பினைகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. சான்றாக நகர அரசுகள் என்பன பேரரசுகளை விட மிகச் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. ஒட்டுமொத்தமாக பண்டைய உலக நாகரிகங்கள் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது எனலாம்.
Be the first to rate this book.