இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்போயின, மாறிக்கொண்டும் வருகின்றன.
`இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய விழிப்புஉணர்வின் பயனாக, பெரும்பாலான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விளைச்சலைப் பெருக்கும் இயற்கை விவசாய முறைக்கு ஈடு இணையற்ற உரமாக விளங்கும் பஞ்சகவ்யம் கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. நுண்ணூட்டச் சத்துக்களும் நுண்ணுயிர் சத்துக்களும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ள, நல்ல உயிர் உரம் பஞ்சகவ்யா.
நோய் விரட்டி மற்றும் பக்க விளைவில்லாத உரமான பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பெருமளவில் பயன் அடைந்த விவசாயிகளின் அனுபவங்களை, பசுமை விகடன் தொடராக வெளியிட்டது. அந்தத் தொடரின் தொகுப்பு நூல் இது. மிக மிக எளிய முறையில், சொற்ப செலவில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, விளைச்சலைப் பெருக்கி விவசாயிகளுக்கு பெரும் லாபம் கொடுக்கிறது. இந்த நூல் பஞ்சகவ்யா பயன்படுத்துவதை இன்னும் பரவலாக்கி, விளை நிலங்களை பசுமையாக்கிட உதவும்.
Be the first to rate this book.