இன்றைய உலகம், பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதை எவரும் மறுப்பதற்கில்லை. இந்தப் பணத்தைப் பெறுவதற்காக மனிதன் படும் பாட்டை சொல்லித் தெரியவேண்டியதில்லை! ஒருசிலரின் கையில் பணக்கிடங்கே இருந்தாலும், அவர்கள் சந்தோஷமாக இருக்க முடிகிறதா? தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள முடிகிறதா? அமைதியாக உறங்கி, பயமும் பதட்டமும் இல்லாமல், நிம்மதியாக எழுந்திருக்கும் பணக்காரர்கள் இன்று எத்தனை பேர்! ‘‘பணம்... பணம்... பணம்... என்று உள்ளத்தில் அமைதி இழந்து, உடலில் உற்சாகம் குறைந்து, மனவலியோடு வாழும் இன்றைய மனிதனால், ‘பணம் என்கிற ஒன்றே இல்லாமல், உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் பொதுவாக இருந்து, எல்லோர்க்கும் எல்லாம் சொந்தம்’ என்கிற சமூகத்தை உருவாக்க முடியும்!’’ என்கிறார் நூலாசிரியர். இது சாத்தியமா? பணத்தையும் தாண்டி, மதிப்பும் மரியாதையும் நிறைந்த, ஒழுக்கமான ஓர் இயற்கை உலகம் இருப்பதை பல்வேறு உதாரணங்களோடும், சுவாரஸ்யமான நிகழ்வுகளோடும், சிலிர்க்க வைக்கும் சிந்தனைகளோடும் விளக்கியுள்ளார் நூலாசிரியர் வேங்கடம். பணம், வங்கி, கடன், வட்டி போன்றவை ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் பயமுறுத்தி வருவதைச் சுட்டிக்காட்டி, ‘பணத்தை மட்டுமே சார்ந்து இல்லாமல் வாழ்வதுதான் இயற்கையின் தர்மம்!’ என்பதையும் தெளிவுபடுத்துகிறது இந்த நூல்.
Be the first to rate this book.