சூப்பர் டீலக்ஸ்? அதையும் தாண்டி!
கிரேக்கர்களின் புறம் சார்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காவியமாகத்தான் ஹோமர் ஒடிஸியை இயற்றினார் என்று நாம் இவ்வளவு காலம் நம்பிக்கொண்டிருந்தோம். கடல்வழிப் பயணித்து டிராய் யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற ஒடிஸியஸின் வீரமும், பேச்சாற்றலும் பிரபஞ்சத்தின் எந்தக் கோடியில் மனிதன் தடம் பதித்தாலும் அவனது பிரயாணம் ஒடிசியின் பெயரால் அழைக்கப்படும் அளவிற்கு இரவாப் புகழைத் தேடித்தந்தன. ஆனால் காலப்போக்கில் நாம் தவறவிட்ட அம்மாவீரனின் அகம் சார்ந்த திணையொன்றை கடலுக்குள் வீசப்பட்ட அற்புத விளக்கை அலைகொண்டுவந்து சேர்த்ததுபோல் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் பெரு.முருகன்.
போர்க்களமே தஞ்சம் என்று வாழ்வைக் கழித்த வீரர்கள் தத்தம் காதல் மனைவியரின் மஞ்சத்தை மீண்டும் சென்றடைய பத்து வருட காலம் பிடித்தது. அந்த ஆரண்ய காண்டம்தான் ஹோமர் இயற்றிய இலியட். கடைக்கோடி வீரன்கூட திரும்பிவிட தலைவன் திரும்பவில்லையே என்ற துயர் தன்னை வாட்டியெடுத்தாலும் பெனிலோப் ஒருபோதும் அவன் இறந்திருக்கக்கூடும் என்று நம்பவில்லை. தன் மாறாப் பற்றையே மாராப்பாக ஒடிஸியஸ் திரும்பி வரும்வரை அணிந்திருந்தாள். கடவுளர்களையே பொறாமைகொள்ளவைக்கும் அளவிற்கு அப்சரஸ்களால் கொண்டாடப்படும் தந்திரக்காரன் ஏன் எப்போது என் மனைவியைச் சென்றடைவேன் என்று மறுகிக்கொண்டேயிருந்தான்? சகல செல்வாக்கும் பொருந்திய கட்டிளங் கோமான்கள் தன்னைக் காமுகிக்கக் காத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும் சற்றும் பதறாமல் சாதுர்யமாக அவர்களுக்குப் போக்குகாட்டி தன் கணவன் வரும்வரை கயவரை அண்டவிடாத பெனிலோப் கற்பின் இலக்கணமாகத் திகழ்வது ஏன்?
ஆனதும் பெண்ணால், அலைந்ததும் பெண்ணால் என்னும் அளவிற்கு பேரழகி ஹெலனிற்காக யுத்தத்தில் இறங்கிய நாயகன் மீண்டும் பெனிலோப்பிடம் வந்தடைவதுடன் இந்தக் காவியம் நிறைவடைகிறது. தங்கக் கோடரியே ஆனாலும் என் சொந்தக் கோடரிபோல் ஆகாது என்று வரும் மரபுக் கதைகூட ஒரு வேளை இப்படியொரு தாம்பத்திய தாத்பர்யத்தை உள்ளடக்கியதாக இருக்குமோ? என்பது போன்ற சூப்பர் டீலக்ஸ் சிந்தனைகள் இந்தப் 'பள்ளியறை ஒடிஸி'யைப் படித்து முடிக்கும்பொழுது உங்களுக்குள் எழுந்தாலும் எழலாம்!
Be the first to rate this book.