பழனிபாபா என்றால் கம்பீரக் குரலில் பேசும் பேச்சாளர் என்கிற தோற்றம் மட்டுமே இங்கு உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்குள் ஓர் தேர்ந்த எழுத்தாளன் இருந்திருப்பதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். அரசியல் என்று வருகிறபோது அடுக்குமொழி ஆவேஷச் சொற்களும், பயணத்தைப் பதிவு செய்கிறபோது ஒரு தேஷாந்திரியாகவும், சர்வதேசங்களைப் பற்றிய கட்டுரைகளில் தனது விசாலமான பார்வைகளையும், அறிவியல் மருத்துவம் குறித்து எழுதுகிறபோது அதற்கே உண்டான துறைசார் நிபுணர்களின் பக்குவத்தோடும், வரலாறு என்று வருகிறபோது தேதி மற்றும் புள்ளி விவரங்களோடும், தனது பால்யத்தை வடிக்கிறபோதும் நெருங்கியோருக்குக் கடிதம் தீட்டுகிறபோதும் இலக்கிய நயங்களோடும் என எழுத்தில்கூட பன்முகங்களோடு தென்படுகிறார் பழனிபாபா.
புனிதப் போராளி இதழ்கள் 50, முக்குல முரசு இதழ்கள் 09, அல்முஜாஹித் இதழ்கள் 12 ஆகியவற்றிலிருந்து, அதாவது மொத்தம் 71 இதழ்களில், 644 பக்கங்களிலிருந்து பழனிபாபா எழுதிய 25 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, இந்தப் புத்தகத்தை தொகுத்துள்ளோம். 1990 முதல் 1993 வரையிலான தமிழகம் மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுகளின் வரலாறும், அநீதிகளுக்கு எதிரான கனல் தெறிக்கும் வார்த்தைகளும் அடங்கிய கட்டுரைகள் இவை.
“என் எழுத்துகள் எதிர்காலத் தலைமுறையினரால் புத்தகங்களாக வரும்” என, திருச்சி மத்தியச் சிறையிலிருந்து எழுதியக் கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார் பழனிபாபா. அவரின் நம்பிக்கையினை உயிர்ப்பிக்கும் பணியாகவும், அவருடைய எழுத்துகளின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கும் நூலாகவும், அவரை எழுத்தாளராக நிறுவும் புத்தகமாகவும் இது இருக்கும்.
Be the first to rate this book.