கண்ணுக்குத் தெரியாத அழிரப்பர் ஒன்று எல்லாவற்றையும் அழித்துக்கொண்டே போக, தன் முயற்சியில் தளராத மாயப் பென்சில் பின்தொடர்ந்து எழுதிப் போகிறது என்று தோன்றியது செல்லச்சாமி வாத்தியாருக்கு. ஆனாலும், ரப்பரின் சக்திதான் பெரியது. மீண்டும் அதே மாதிரி எதையும் எழுத முடியவில்லை பென்சிலால்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அத்தியாயங்கள். ஊன்றிக் கவனித்தால் மட்டுமே தொடர்பின் இழை புரியும் எழுத்து லாகவம். சிறு மணல் துகளோ, அண்ட வெளியோ எதையும் முழுப் பரிமாணத்துடன் விவரிக்கும் ஆற்றல். முதல் வரியிலிருந்து இறுதி அத்தியாயம் வரை வாசகனை பிரமிக்க வைக்கிற சம்பவங்கள்.
நேர்ப் பார்வையுடன் நடந்து கொண்டிருக்கும் சிறுவனின் பின்னால் அரவமில்லாமல் தொடர்கிறது ஒரு கரடி. நீண்ட கூர் நகங்கள் கொண்ட இரண்டு முன்னங்கால்களையும் அரவணைக்க நீளும் கைகள் போல நீட்டியபடி அவனை நெருங்குகிறது... இன்னும் இரண்டு தப்படிகள்தாம் பாக்கி. கரடி பாய்கிறது...
சுவாரஸ்யம், விறுவிறுப்பு என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள். வாழ்க்கை கற்றுத் தரக்கூடிய அனுபவங்களைவிடச் சிறந்த மர்ம நாவல் வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும் மேலும் மெருகேற்றி ஒவ்வொரு பாத்திரத்தையும் உலவவிடும் கணங்களில் யுவன் சந்திரசேகர் மிக அழுத்தமாகத் தெரிகிறார்.
தமிழ் நாவல் சரித்திரத்தில் இதுவரை எழுதப்படாத புதிய களமென விரிகிறது யுவன் சந்திரசேகரின் 'பகடையாட்டம்.'
Be the first to rate this book.