உலக அளவில் வெளியான குழந்தைகள் பற்றிய திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நூல். வெறுமனே திரைப்படங்கள் குறித்தும், கதைச்சுருக்கம், நடிகர், நடிகையர் பற்றியும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், படம் உருவானதன் பின்னணி, கேமரா கோணங்களின் சிறப்பு, காட்சிகளின் முக்கியத்துவம் என்று பலவகையிலும் சிறப்பான திரைப்படங்களைப் பலமுறை பார்த்து, ஆராய்ந்து விரிவாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு.
நெதர்லாந்து திரைப்படமான "பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்' (1996) படத்தில், சொந்த மண்ணைப் பிரிவதனால் சமூகத்தின் மீது சிறுவன் மொஹமதுக்கு ஏற்படும் கோபமும், அதற்காக அவன் யாரிடமும் பேசாமல் அழுத்தமான மௌனியாக இருப்பதும், இறுதியில் அப்பாவுக்காக அவன் அவனையறியாமலேயே பேசத்தொடங்குவதும் ரசிக்கும்படியான திருப்புமுனை. "பிடலின் மீது பழியைப்போடு' (2006-பிரான்ஸ்), "புயலின் மையம்' (1956), "கெஸ்' (1969), "எல்விஸ் எல்விஸ்' (1977) போன்ற 17 வெளிநாட்டுத் திரைப்படங்களுடன், சந்தோஷ் சிவன், பிரியதர்ஷன், விஷால் பரத்வாஜ், தீபா மேத்தா, மீரா நாயர், தபன் சின்ஹா, அமீர்கான் ஆகியோரின் ஹிந்தித் திரைப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் நடித்த சிறுவர்களையும், "காக்காமுட்டை' படத்தில் நடித்த சிறுவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் அமெரிக்காவின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தத்தெடுத்தது என்ற அரிய தகவலை தன் முன்னுரையில் கூறியிருக்கிறார் நூலாசிரியர். திரை ஆர்வலர்கள் படித்துப் பாதுகாக்கவேண்டிய நூல்.
Be the first to rate this book.