ஆயுதமேந்திய குழுவொன்று வீடு புகுந்து பட்டப்பகலில் 14 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழ்நாட்டிற்குப் புதிது. அதுவரை தமிழர்கள் ஏ.கே 47 துப்பாக்கியைத் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது பத்மநாபாவின் படுகொலை. இது சகோதர யுத்தம் மட்டுமல்ல. கள்ளத்தோணியில் வந்திறங்கி, கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலை. கோடம்பாக்கத்தின் ஜக்காரியா காலனியை ரத்தச் சகதியாக்கிவிட்டு கொலைகாரர்கள் தப்பிச் சென்றது, தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்த கரும்புள்ளி. இந்தக் கொலையாளிகளைத் தேடிப் பிடித்திருந்தால், ராஜிவ் காந்தி படுகொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். 38 வயதில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் பத்மநாபா. ஆயுதமேந்தித்தான் பத்மநாபாவும் போராடினார் என்றாலும், அவரது கரங்களில் ரத்தக்கறை இருந்திருக்கவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தவொரு சாதாரண வழக்கிலும் கூட அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும் பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு அன்று இருந்தது. தொலைநோக்குச் சிந்தனையாளர். சர்வதேச அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டவர். ‘தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்’ என்றவரை இனத்துரோகி என்றார்கள். ‘தனி ஈழம் சாத்தியமில்லை’ என்னும் யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட ஒரே போராளி பத்மநாபா. அவர் இருந்திருந்தால், தனித்துவம் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் உயிர்ப்போடு இருந்திருக்கக் கூடும். உள்நாட்டுப்போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இத்தனை சாத்தியங்களையும் இல்லாமல் ஆக்கியது, ஜூன் 19, 1990ல் கோடம்பாக்கத்தில் வெடித்த ஏ.கே 47 துப்பாக்கி.
Be the first to rate this book.