தமிழில் ஒரு கவிஞரைப் பற்றி அதிக நூல்கள் வெளிவந்திருக்கிறது என்றால், அது பாரதியாரைப் பற்றித்தான் இருக்கும். ஆயினும், ஒவ்வொரு நூலிலும் அவரைப் பற்றி அறியப்படாத செய்திகள் ஒரு சிலவாவது இடம் பெற்றுக் கொண்டே இருப்பது வியப்பானதுதான். இந்த நூலில் "அறிதொறும் அறியாமை' சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்நூலை எழுதியிருப்பவர் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து பாரதி ஆய்வில் ஈடுபட்டுவரும் சீனி.விசுவநாதன் என்பதுதான் (பாரதியின் எழுத்துகள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து 16 தொகுதிகளாக வெளிக்கொணர்ந்தவர்).
இந்நூலில் பாரதிக்கும் திருநெல்வேலிக்கும் உள்ள தொடர்பில் தொடங்கி, காசி நகரில் பாரதி இருந்த காலம், பத்திரிகைத்துறையில் அவருடைய சாதனை, அவர் பெற்ற பாராட்டுகள், ஹரிஜன மக்கள் முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த அக்கறை போன்ற பல்வேறு செய்திகள் பத்து தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
பாரதி கவிஞராக மட்டுமல்லாமல், பத்திரிகையாளராகவும் இருந்ததால், அன்றாட சமூக நிகழ்வுகளைப் பற்றிய தன்னுடைய கருத்துகளை கவிதையாகவோ, கட்டுரையாகவோ, செய்தியாகவோ தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
அத்துடன் அவருடைய சுடர் மிகும் அறிவும் புலப்படுகிறது. குறிப்பாக, பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யைச் சந்தித்தது பற்றி எழுதும் கட்டுரையில், மேற்கோளாக கம்பராமாயணப் பாடல்களைக் குறிப்பிடுகிறார். திருநெல்வேலி ஆச்சார சீர்திருத்த சபையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிடும் பாரதியார், சபை பிரதிநிதிகள் தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.
பாரதியைப் பற்றிய பல அரிய உண்மையான தகவல்களடங்கிய தொகுப்பு இது.
Be the first to rate this book.