காலத்தை நம்பி எழுதப்பட்டவையே இத்தொகுப்பில் இருக்கும் கதைகள். இவற்றை ஒருசேரப் படித்துப் பார்க்கிற கணத்தில் இக்கதைகளில் மாறிமாறி ஊடாடுகிற காலத்தின் கோலம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஓட்டாஞ்சில்லை வீசிவிட்டு, பின்னாலேயே ஒற்றைக்காலால் நொண்டியபடி கட்டம்கட்டமாகத் தாண்டிச் செல்கிற சிறுமியைப்போல, பழைய காலத்தின் கட்டங்களை நானும் தாண்டித்தாண்டிச் சென்று விளையாடுவதுபோல இருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட காலம்வரைக்கும் சென்று மீண்டிருக்கின்றன இக்கதைகள். ’வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்’ என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. வேகமும் மோகமும் நிறைந்த ஆண்டாளின் வரிகளுக்கு நிகரான இவ்வரிகளை வாசிக்கும்போது, நான் அவற்றை ஒரு மந்திரத்தைப்போல வாய்விட்டு உச்சரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி எல்லாவற்றையும் நானாக, எல்லாவற்றிலும் நான் இருப்பதாகப் பார்க்கிற மனநிலையில் இப்போது நான் வாழ்கிறேன். அந்தப் பார்வையில் எழுதப்பட்டவையே இக்கதைகள்.
Be the first to rate this book.