குழந்தைகளுக்குப் பேசுவது பிடிக்கிறது. குழந்தைகள் பேசுவதை யாராவது நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்றால் அவர்களை மிகவும் பிடிக்கிறது.
கதை சொல்லி சுகோம்லின்ஸ்கி குழந்தைகளின் அருகாமையை விரும்பியவர். இந்தப் புத்தகத்தில் வரும் தாத்தாவின் ஓவியத்தைப் போலவே கண்ணத்தில் கை வைத்தபடி குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவராக அவர் இருந்திருக்கிறார். அதனாலேயே அவர் கதைகளும் குழந்தையைப் போலவே சாதாரண தோற்றத்திலும் பரிபூரணமான வடிவத்திலும் இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதையிலும் நமக்குப் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் நம்மால் பார்த்துவிட முடியும். பொய் சொல்லத் தெரியாத குழந்தை, கேள்விகளை நிறுத்தாத குழந்தை, புத்துணர்வான பதில்களைக் கண்டுபிடிக்கும் குழந்தை, இயற்கையோடு தன்போக்கில் உறவாடும் குழந்தை என பல கதைகளில் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்தியபடி உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் நேரடியாக இடம் பெறாத எறும்பு, சிட்டுக்குருவி மற்றும் லேசிபோன்ஸ் கதையிலும்கூட குழந்தைகள் தான் ஒளிந்திருக்கிறார்கள் என்பதை உங்களால் வாசிக்க முடிந்துவிட்டால் இந்தப் புத்தகத்திற்கு அதைவிட வேறு மனநிறைவு இல்லை.
Be the first to rate this book.