தமிழ் சினிமா உலகில் 3 தலைமுறை நட்சத்திரங்களுடன் 195 படங்களில் நடித்தவர் சிவகுமார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, உயிரோட்டமான ஓவியர். அசர வைக்கும் அற்புதமான பேச்சாளர். அவர் "ராணி" வார இதழில் "உங்களோடு பேசுகிறேன்" என்ற தலைப்பில் 75 வாரங்கள் தொடர் கட்டுரை எழுதினார். அதில் மேலும் கூடுதல் தகவல்கள், கண்ணைக் கவரும் புதிய புகைப்படங்கள், அவரது கை வண்ணத்துக்குச் சாட்சிகளாகத் திகழும் பிரமிப்பான ஓவியங்களுடன் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.
ஓவியம், நடிப்பு, பேச்சு என மூன்று களங்களிலும் "ஹீரோ"வாகத் திகழ்ந்த சிவகுமார், தனது திரை உலக அனுபவங்களையும், தனி மனித வாழ்க்கையில் கற்ற பாடங்களையும் இந்த நூலில் சுவையாகச் சொல்கிறார். அவர் வரைந்த ஓவியங்களையும், அவற்றின் சுவையான பின்னணிகளையும் விரிவாக விளக்குகிறார். எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரஜினிகாந்த் போன்ற அவர் பழகிய பிரபலமானவர்களின் ருசிகரமான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பக்கத்துக்குப் பக்கம் கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள்.
வணங்காமுடி
நடிகர் சிவகுமாரை நேரில் பேட்டி கண்டும், அவருடைய பேச்சுகள் & எழுத்துக்களை தொகுத்தும், ‘ஓவியர்... நடிகர்... பேச்சாளர் சிவகுமார்’ என்ற தலைப்பில் இந்த அரிய நூலை படைத்திருக்கிறார் வணங்காமுடி. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரின் வரலாறுகளை ‘ராணி’யில் தொடர்களாக எழுதியவர். இவரது முதல் நூலான ‘கண்ணதாசன் கதை’, தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. ‘வணங்காமுடி’ என்பது கண்ணதாசனின் புனைபெயர். அந்த கவியரசரின் வரலாற்றை இதே பெயரில் எழுதினார். நெல்லை மண்ணின் (செட்டிகுளம் பண்ணையூர்) மைந்தரான இவரது இயற்பெயர் சு.ராமகிருஷ்ணன். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தவர். ‘தினத்தந்தி’, ‘மாலைமலர்’ நாளேடுகளில் நிருபராக பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். தற்போது ‘ராணி’ வார இதழின் செய்தி ஆசிரியராக இருக்கிறார்.
Be the first to rate this book.