ஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன.
சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்ஸ், அனிமேஷன் என்று தொடங்கிய அனுபவங்கள், ஓவியம் தீட்டும் தீராத ஆர்வத்தில் கொண்டுசென்றது, என் ஓவியப் பயிற்சிகளும் முயற்சிகளும் பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கியது.
உருவப்படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, பிலிப் புக் அனிமேஷன் எனப் பல வடிவங்களும் அதற்கான அடிப்படை பயிற்சிகளான உடற்கூறியல், உளக்காட்சி என்றெல்லாம் பயணித்து ஓரிரு தசமங்களுக்கு பின்னர் நான் கண்டது மெய்சாரா அரூப ஓவியங்களை. பல கருக்கள், பல ஊடகங்கள், பல செயல்முறைகள் என்று எண்ணிலடங்காத வகைமைகளைக் கொண்டது ஓவியப் பயணம் என்பதை உணர முடிந்தது.
பொதுவாகவே ஓவியம் என்பது ஒரு கருத்தினை வெளிப்படுத்த உதவும் சாதனமாகவும், அழகியல் சார்ந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. ஓவியத்திற்கு இவற்றைத் தாண்டிய ஒரு சாத்தியமிருப்பதைப் பல ஆண்டுகள் பயணித்த பிறகே உணரமுடிந்தது.
நாம் காண்கின்ற காட்சிகளின் அடிப்படையில் படைக்கப்படும் மெய்சார்ந்த ஓவியங்கள், கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், உணர்வுகளின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்கள் போன்றவை நாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. அதனைத் தாண்டிய மெய்சாரா அரூப ஓவியங்களில் இருக்கும் இலக்கணம் மற்றும் அணுகுமுறைகளை நாம் அறிந்துகொண்டால் அவற்றையும் முழுமையாக நம்மால் கண்டுகளிக்க முடியும். அந்தப் படைப்புகளிலுள்ள ஓவியர்களின் தேடல்களில் நம்முடைய தேடல்களையும் உணரமுடியும்.
ஓவியம் சார்ந்த குறிப்பிட்ட தேடலில் நான் பயணித்த பொழுது அனைத்துக் கலைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு தொடர்சங்கிலி உள்ளதென்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள கருத்துக்கள் ஓவியத்திற்கு எவ்வாறு பொருந்துமோ அதுபோலவே புகைப்படக்கலை, இலக்கியம், நடனம், இசை, சினிமா என்று படைப்புசார்ந்த எந்தச் செயலுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
ஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதித்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.
- கணபதி சுப்பிரமணியம்
Be the first to rate this book.