‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ நூலுக்கு இரண்டு சிறப்புகள்.
ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக்கொண்டார் என்பதைப் பிறர் வாயிலாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. தனது வாழ்க்கையையும் கலையையும் குறித்து நேர் அனுபவங்களின் பின்புலத்துடன் தமிழில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை இதுவே.
இந்தத் தன்வரலாறு ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக வெளியானது. அரசியல் பிரமுகர்களும் திரைப் பிரபலங்களும் உழைப்பால் உயர்ந்தவர்களும் சொல்லும் வெற்றிக் கதைகளே வெளியாகிவந்த வெகுஜன இதழொன்றில் பெருவாரியான வாசகர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு கலைஞரின் சுயசரிதை வெளியானதும் அது கணிசமான வாசகர்களை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.
கலைஞர் ஒருவரின் தன்வரலாறாக மட்டுமல்லாமல் விடுதலைக்கு முன்னும் பின்னுமான முக்கால் நூற்றாண்டுக் காலத் தமிழக வாழ்க்கையின் கலை, சமூக, அரசியல் பின்புலங்களை அனுபவ அறிவுடனும் ஆழ்ந்த நோக்குடனும் சுவையாகவும் முன்வைக்கிறது தனபாலின் ‘ஒரு சிற்பியின் சுயசரிதை’.
5 சிறந்த ஆர்டிஸ்ட் எஸ்.தனபால்
ஆர்டிஸ்ட் எஸ். தனபால் அவர்களின் சுயசரிதை படிபதற்ககு மிக எளிமையாக சற்றும் சலிப்பு ஏற்படாவண்ணம் உள்ளது ,ஆர்டிஸ்ட்களும் நுண்கலை படிப்பவர்களுக்கும் கண்டிப்பாக உத்வேகம் தரக்கூடிய ஒரு புத்தகம் , சென்னை ஓவியக் கல்லூரி பற்றி பல தகவல்களும், அவர் உருவாக்கிய பல தேச தலைவர்களின் சிற்ப பின்புலக் கதைகளும், அவர் பெரிதும் ஈடுபாடு கொண்ட நாடகம், நாடியம் மற்றும் தோட்டக்கலை போன்சாய் தாவரங்கள் வளர்த்தல் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் .
Prakash 31-03-2020 02:29 pm