இந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் கடந்த ஒரு வருடத்திற்குள் எழுதப்பட்டவை.
''நான் என் மனதை சுத்திகரிப்பதற்கான ஒரு முறைமையாக கவிதை எழுதுதலை, பெருந்தொற்று காலத்தில் வீடடைந்து வேலை செய்யும் லயம் தப்பிய கடந்த இரண்டு வருடங்களில் கண்டுகொண்டேன். நான் பதின்பருவத்திலிருந்தே கவிதை எழுதுபவனாக இருந்தாலும் கவிதையை எனக்குரிய வடிவமாக மீட்டெடுத்ததும் உறுதி செய்துகொண்டதும் சமீபத்தில்தான்.'' என்று தனது கவிதையியலை முன்வைக்கிறார் எம்.டி. முத்துக்குமாரசாமி.
''எழுதிப்பார்த்து ஆழ் மனதை அறிதல் என்பதில் ஒரு வகையான அறிவுத்தோற்றவியலின் அதீத கற்பிதம் (epistemological fantasy) இருக்கிறது. என் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை வைத்து நான்தான் என்று பிறர் அறுதியிடுவது போல அல்லது புகைப்படம் எடுத்த பின்னரே, கண்ணாடியின் முன் நின்ற பின்னரே என் முகம் எனக்கு அடையாளம் ஆவது போல எழுதி முடித்த கவிதை என்னை முழுமையாகக் காட்டுமா? இல்லை ஏதேனுமாவது சொல்லுமா? கவித்துவ பிரக்ஞையை கவிதை வெளிப்படுத்துமா? அகத்தையும், அனுபவங்களையும் பிடிப்பதற்கு மொழிக்கு இருக்கும் ஆற்றல் என்ன? மொழியின் போதாமை என்ன? இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொள்ளும்போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாயின. ஒரு கவிதையை எழுதி முடித்த உடனேயே நான் வேறொருவனாய் ஆகிவிடுகிறேன். என்னுடைய ‘நான்’ பிடிக்கு அகப்படாமல் தொடர்ந்து நழுவிக்கொண்டே இருக்கிறது. எனவே என்னையும் என் வாழ்க்கையும் தொடர்புறுத்தி இந்தக் கவிதைகளை வாசிப்பது உங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கூட்டாது. ஆகவே நீங்கள் இந்தக் கவிதைகளை நீங்கள் உங்கள் வாசிப்பு, உங்கள் வாழ்க்கைப் பின்புலம் ஆகியவற்றை வைத்து வாசித்து பொருள்கொள்க''... என்று எம்.டி.எம் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
எம்.டி.முத்துக்குமாரசாமி (பிறப்பு 1964) சென்னையில் இயங்கும் தேசிய நாட்டுப்புறவியல் மையத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். ‘பிரம்மனைத் தேடி’, ‘மைத்ரேயி மற்றும் பல கதைகள்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ‘பிற்கால அமைப்பியலும் குறியியலும்’ என்ற பின் அமைப்பியல் அறிமுக நூல், ‘நிலவொளி எனும் இரகசிய துணை கட்டுரைகளும் கட்டுரைகள் போல சிலவும்’ கட்டுரைத் தொகுப்பு, ‘குதிரைக்காரன் கதை’, ‘சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போவதில்லை’ ஆகிய நாடகங்கள் ஆகியவற்றின் ஆசிரியர். ஆங்கிலத்தில் இவருடைய நாட்டுப்புறவியல் சார்ந்த கட்டுரைகளும் நூல்களும் பிரசுரமாகியிருக்கின்றன.
Be the first to rate this book.