உணர்வுகளை அதற்குரிய மென்மையோடு அணுகாமல், அவற்றை மென்பொருளோடு ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளும், இந்த மாடர்ன் யுகத்தில் தான் என் அல்லியும் வாழ்கிறாள். பதின்ம வயதில், அவள் மனத்தோட்டத்தில் பூத்த காதல் பூவை, எத்தனை பத்திரமாக கையாள்கிறாள் என்பதே இந்த நாவல். பயணத்தின் கடைசி பக்கத்தைப் புரட்டும் போது, "இதெல்லாம் சாத்தியம் தானா?" என்று கூட சிலருக்குத் தோன்றலாம். நூறு சதவீதம் சாத்தியமே..! அறிவியல் படி, நமது மூளையால், எந்தப் புதுமுகத்தையும் உருவகப்படுத்த முடியாதாம். அதன்படி பார்த்தால், ஒவ்வொரு படைப்புமே ஏதோ ஒரு தாக்கத்தால், உருவாபவை தான். இன்டர்நெட் யுக காதல், என்னுள் ஏற்படுத்திய தாக்கம் தான் இந்தப் படைப்பு..! நிச்சயம் இது வெறும் காதல் கதையாக மட்டும் இருந்து விடாது. காதலுக்கு அப்பால், நம்மிடையே குறைந்து கொண்டே வரும் புரிதல்களை அழகாக எடுத்துரைக்கும். என் அல்லியுடனான பயணத்தில், நிச்சயம் நீங்கள், "உங்களை" உணர்வீர்கள்..! அம்மா, அப்பா, தங்கை என யாராக இருந்தாலும் சரி, அன்புக்குரியவரிடம் தங்கள் புரிதல்கள் நல்ல முறையில் வேறுபட்டால், அதுவே என் அல்லியின் ஆகச் சிறந்த வெற்றி..! "உலகைப் படைத்த மாயவித்தைக்காரன், அளவிட முடியா அன்பை கம்பளமாக விரித்து, அதில் உணர்ச்சி எனும் மினுமினுப்பு விதைகளைத் தூவி, அவற்றிற்குப் பாசம், நேசம் போன்றவற்றை முறையே நீரும் உரமுமாக்கி, "மனிதர்கள்" என்ற "உயிர்ப்பூக்களை" விளையச் செய்துள்ளான். காலம் இன்னும் எத்தனை முறை நீண்டு பெருத்து வளர்ந்தாலும் இந்த உணர்வுகளுக்கு இணை உணர்வுகளாகவே தான் இருக்கும்..!"
Be the first to rate this book.