சீனத்தில் 1980களில் தலைமறைவுச் சிற்றிதழ்களில் தங்கள் கவிதைகள் வெளியிட்ட தங் யாப்பிங், ஹூங் செங், துவோ துவோ, ஹா ஜின், பெய் தாவோ, யாங் லியான் போன்ற மிகச் சிறந்த கவிகளின் கவிதைகள் அதிகமும் மொழிபெயர்க்கப்படவில்லை. தங் யாப்பிங்கின் உச்சபட்ச அழகியலும் தோல்வியின் பெருவலியும் மயங்கி நிற்கும் கறுப்புக் கவிதைகள், உலகப் பரப்பில் பலரும் விரும்பிப் படித்த கவிதைகள். தற்சமயம் கிடைக்கும் தங் யாப்பிங்கின் எல்லாக் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. நோபல் வரிசையில் நிற்கும் பெய் தாவோவும் ஹா ஜின்னும் உலக அளவில் பெரிய கவிகள். இந்தக் கவிதைகளை நுண்மையாகப் புரிந்துகொள்ளவும் கவிதையியல் எவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது என்பதை அறிவதற்காகவும் கவிகளின் கட்டுரைகள், நேர்காணல்கள், முன்னுரைகள் ஆகியவை இணைக்கப்பட்டள்ளன. மூடுபனிக்கவிகள், பின் மூடுபனிக்கவிகள் என்று அழைக்கப்பட்ட 14 கவிகளின் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. உலகில் நடக்கும் எந்தப் போராட்டமும் வீணாவதில்லை. அது கவித்துவத்துடன் இணைந்து வரும்போது நம்மால் ஒதுக்க முடிவதில்லை. சீனம் என்றாலே பனியும் மூங்கிலும் சீறியுருண்டுவரும் கடல் அலைகளும் நமது மனதில் தோன்றுவதோடு இந்த மூடுபனிக் கவிகளும் இனி நமது மனதிற்குள் நிற்பார்கள்.
Be the first to rate this book.