உலகப் பேரறிஞர்களுடன் காந்தியை ஒப்பீடு செய்து பேராசிரியர் கா.செல்லப்பன் எழுதியுள்ள இந்நூல் முக்கியமானது. காந்தியைப் புரிந்துகொள்வதில் சிலருக்கு இருக்கும் போதாமைகளை இந்நூல் தகர்க்கும். ‘தனது வாழ்க்கையே ஒரு சத்திய வேட்கை. தம் வாழ்க்கையே சத்தியத்தின் பரிசோதனைக் களம் எனக் கருதியதால், தமது சுயசரிதையை ‘சத்திய சோதனை’ என்று காந்தி குறிப்பிட்டார். ‘புத்தரும் மகாவீரரும் ஏசுவும் அஹிம்சையைப் போதித்தனர். ஆனால், காந்திஜிதான் அதை அரசியலில் பயன்படுத்தி வெற்றியும் கண்டார்’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் செல்லப்பன். மார்க்ஸ், காந்தியடிகள் இருவருமே ஏகாதிபத்தியத்தை, முதலாளித்துவத்தின் தொடர்ச்சியாகவே கருதினார்கள்.
வெள்ளையர்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஏகாதிபத்தியம் உதவியது. ஆனால், காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அளவுக்கு, முதலாளித்துவத்தை எதிர்க்கவில்லை என்கிற விமர்சனத்தையும் முன்வைக்கிறார் நூலாசிரிரியர். தோரோவுக்கும் காந்திய சிந்தனைக்கும் இடையே உள்ள பிணைப்பையும் செல்லப்பன் பதிவுசெய்துள்ள விதம் அழகு வெளிச்சம். காந்தியடிகளின் தர்மகர்த்தா பொருளாதாரத்தின் முன்னோடியாக, வள்ளலாரின் ‘ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்’ என்ற கருத்தைக் கருதலாம் என்கிற ஒப்பீடும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. நூலில் நிறைய எழுத்துப் பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
Be the first to rate this book.