டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால் எப்படி இத்தனைப் பிரச்னைகளோடு போராட முடிகிறது’ என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஒரு நாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் வழியே டூவீலரில் நான். கடுமையான போக்குவரத்து நெருக்கடி. ஹாரன் சத்தங்களும் சலிப்புக் குரல்களும் சரிவிகிதக் கலவையாக இருந்த அந்த மேம்பாலத்தின் ஓரத்தில் எதையுமே சட்டை செய்யாமல் ஒரு பெரியவர் போஸ்டர் கிழித்துக்கொண்டு இருந்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்கிற எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை. அவர்... ராமசாமி! அவரைப் பற்றிய புத்தகத்துக்கான அவசியம் பிறந்த இடம் - கணம் அது! பிறப்பு தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை சுய சரிதையாக இந்தப் புத்தகத்தில் ராமசாமி சொல்லி இருக்கும் செய்திகள் சமூக ஆர்வம்கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அரசியல், காவல்துறை, மீடியா எனக் கலந்துகட்டி தன் வரலாற்றைச் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அலாதியானது. ‘இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?’ எனச் சிலிர்க்கத்தக்க ஒருவரின் வரலாற்றை சமூகப் போராளிக்கான சமர்ப்பணமாக வெளியிடுகிறது விகடன் பிரசுரம்!
Be the first to rate this book.