சூஃபி தத்துவ ஞானப் போக்கிற்கு ஏற்ப உமர்கய்யாம் இறந்த காலச் சேற்றில் சிக்கிக் கொள்ளாமல், எதிர்காலக் கனவுகளில் மிதக்காமல், நிகழ்கால எதார்த்தத்தில் அழுத்தமாகக் கால் பதித்து நின்று, எதிரில் உள்ள வாழ்க்கையை அனுபவிக்கச் சொன்னவர் என்பதை அவரது பாடல்கள் புலப்படுத்துகின்றன.
உமர்கய்யாம் போன்ற ஞானக் கவிஞர்களின் தோற்றம் வெற்றுச் சூன்யத்திலிருந்து தோன்றுவதன்று. கனமான தத்துவப் பின்னணி இல்லாமல் இப்படிப்பட்ட ஒருவரின் வெளிப்பாடு சாத்தியமல்ல. ஏற்கனவே நின்று நிலவிய ஒரு தத்துவ ஞானத் தளத்தின் மீதுதான் 'ருபாயத்' நின்று கொண்டிருக்கிறது.
ஆசியத் தத்துவச் சிந்தனைகளின் அடித்தளம் காரணமா, ருபாயத்தில் இந்து மதங்களின் சாயல் பலப்பல இடங்களில் காணப்படுகின்றன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் முதலிய சிந்தனைப் போக்குகள் பரவலாகக் காணப்படுகின்றன.
'ருபாயத்' நமது சொந்தப் பண்பாட்டுக் காவியமாகவே தோன்றுகின்றது. இதில் அந்நியத் தன்மை மிகமிகக் குறைவு. அதுவும் தமிழ் வடிவம் பெறுகையில் தமிழ்ப் படைப்பாகவே மாறிவிடுகிறது.
Be the first to rate this book.