நவீன சமூக மாற்றத்திற்கான அறைகூவல்கள் தொடங்கி நூறாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றின் அத்தனை ஊடுவழிகளையும் கண்டு சிந்தித்து முன்செல்வது எனும் பெரும் செயல் முன் அஞ்சி நிற்கின்றன இன்றைய நவீன மனங்கள். தடுமாற்றமும் நற்குணங்களும் கொண்ட ஒருவன், அத்தடுமாற்றங்களின் சுவடற்ற ஒருவனின் முன் நாவலுக்குள் திகைத்து நிற்பதை, நாவலுக்கு வெளியே நின்று பதைப்புடன் பார்த்து நிற்கிறான் மற்றொருவன். அவர்கள் அத்தனை பேரின் வழியாக உருவாகி வரும் ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் வழியாக அச்சூழலில் வாசகனையும் பங்குபெற வைக்கிறது இந்தப் படைப்பு. அனைத்தும் கலந்து புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் உள்ள வெளி மறையும்போது நாவல் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது.
ஒளிர்நிழல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டதெனச் சொல்ல முடியவில்லை. முற்றுப்பெற விரும்பாத பல பகுதிகள் வாசிப்பவரின் கற்பனைக்கென ஏங்கி நிற்கின்றன. நாவலுக்குள் எழுதப்படாமல் விடப்பட்டிருக்கும் எண்ணற்ற அத்தியாயங்களை, இதை வாசிக்கிற ஒவ்வொரு மனமும் தன்னுள்ளே கண்டுகொள்ளும் என்பது மட்டுமே எழுதப்படாத அத்தியாயங்களுக்கான நியாயமாக இருக்க முடியும். நவீன காலத்தை நோக்கி உத்வேகத்துடன் நகர்ந்து வருபவர்களின் அறம் பற்றிய மதிப்பீடுகளையும், மாற்றங்களின் முன் திகைத்து நிற்பவர்களின் இயலாமைகளையும் விசாரிக்க முயல்கிறது இப்படைப்பு. நம் சாதிய அடுக்குகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பொதுச் சித்திரத்தைக் கலைப்பதன் வழியாக தலித் என்ற சொல்லுக்கு ஒரு மறுவரையறையைக் கோருகிறது.
Be the first to rate this book.