ஒளிப்பதிவாளர்கள் குறித்த புத்தகம் இது. ஹாலிவுட் எல்லாவிதமான சோதனைகளுக்கும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போது வெவ்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் தங்களை அதோடு இணைத்துக் கொள்ள ஒளிப்பதிவாளர்கள் வந்தார்கள். அவர்களில் சிலருக்கு ஆங்கிலம் தெரியாது. சிலருக்கு கையில் ஒற்றை ரூபாய் இருந்ததில்லை. ஆனால் இவர்கள் எல்லோரும்தான் ஒளிப்பதிவுத் துறையைக் கட்டி ஆண்டார்கள். புதிது புதிதாய் ஒளியமைப்பை அறிமுகம் செய்தார்கள். பிரமாண்டப் படங்களுக்கு ஒளியமைத்தவர்கள், திகில் படங்களுக்கு, ரோடு மூவிகளுக்கு, ஒரே இடத்தில் மட்டுமே முழுப் படத்தையும் எடுத்தவர்கள், கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்கள், குறைந்த பட்ஜெட்டில் தரமான ஒளிப்பதிவு செய்தவர்கள் என பதினைந்து ஒளிப்பதிவாளர்களின் விரிவான நேர்காணல்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. நான் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகம் இது.
இயக்குநராக விருப்பம் கொண்டவர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் எந்தத் துறையினராக இருந்தாலும் ஒளிப்பதிவின் அடிப்படையைத் தெரிந்து கொள்வது சிறந்தது. ஆடை வடிவமைபாளர்கள், அரங்க வடிவமைப்பு என்று அவர்களுக்கும் ஒளிப்பதிவாளருக்குமான உரையாடல் எப்படியாக இருக்க வேண்டும், ஒரு லொகேஷனை எப்படி அணுக வேண்டும், வண்ணங்களை புரிந்து கொள்வது, மிக சிக்கலான இடங்களில் குறைவான ஆட்களைக் கொண்டு எப்படி படம்பிடிப்பது, இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையில் இருக்க வேண்டிய ஒற்றுமை, லென்சுகள், லைட்டுகள், இரவு பகல் பாராமல் வேலை செய்யும்போது ஏற்படும் சோர்வை விலக்குவது, உள்ளார்ந்த அமைதியுடன் வேலை செய்வது என்று எல்லாவற்றையும் பற்றி இந்த ஒளிப்பதிவாளர்கள் பேசியிருக்கிறார்கள்.
Be the first to rate this book.