ரசியாவில் 1917-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் புரட்சி, முதலாளித்துவப் புரட்சி எனப்படுகிறது. இதன் காரணமாக ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் வம்சத்தின் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டது. புதிய இடைக்கால அரசு அமைந்தது.
இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, சோவியத்துகள் எனப்பட்ட தொழிலாளர் , விவசாயிகளின் கூட்டுச்சங்கங்களில் ரசிய உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினரும் பெருமளவில் சேர்ந்து தமக்கான உரிமைகளை வலியுறுத்தி போராடத் தொடங்கினர். இந்தத் தொழிலாளர் சங்கங்கள், இன்றைக்குள்ள யூனியனைப் போன்றவை. நாடு முழுவதும் அவர்களுக்கு வலுவான கட்டமைப்பு இருந்தது. இதன் பின்னணியில் பாட்டாளி வர்க்கத் தலைவன் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், ரஷ்யாவின் தலைநகராக இருந்த பெட்ரோகிராட்டில் 1917 அக்டோபர் 25-ம் தேதி புரட்சி வெற்றி பெற்றது. இதன் காரணமாக ரஷ்யாவின் இடைக்கால அரசு வீழ்ந்தது.
இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முதல் புரட்சி இது. மக்கள் பங்கேற்புடன் பொதுவுடைமை ஆட்சி அமைய முதல் பொறியாகத் திகந்த இந்தப் புரட்சி, உலக அரசியலில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதலாளித்துவத்திற்கு எதிரான சவுக்கடி ரஷ்யாவில் தொடங்கி அதன் பிறகு ஒவ்வொரு நாடுகளுக்கும் தொடர்ந்தது. அது வியட்நாமிய மக்களிடம் புது மாதிரியான விளைவை ஏற்படுத்தியது.
"அக்டோபர் புரட்சியும் சோசலிச நாடுகளும் அளித்த உதவினாலும் சக்திமிகு ஊக்குவிப்பினாலும் முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளர் வர்க்க இயக்கம் தேச விடுதலை இயக்கம் என்றும் கண்டிராத வேகத்தையும் வீச்சையும் பெற்றன" என்கிறார் ஹோசிமின்.
ஹோசிமின் அவர்களின் முக்கிய சொற்பொழிவுகளையும் கட்டுரைகளையும் தொகுத்து சென்னையிலுள்ள சோவியத் கன்சல் ஜெனரல் அலுவலகம் செய்தித் துறையின் சார்பில் 1972 லெனினும் லெனினிசமும் என்கிற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூலில் இருந்து அக்டோபர் புரட்சி குறித்து ஹோசிமின் கூறியுள்ள 11 தலைப்புகளை எடுத்து நாம் அக்டோபர் புரட்சி என்கிற தலைப்பில் நூல் ஒன்றை செஞ்சோலைப் பதிப்பகம் சார்பில் வெளியிடுகிறோம்.
Be the first to rate this book.