'சிறு காட்டுக் குருவி' கவிதையில் உடைந்த சிறகுகளில் படிந்துள்ள குருதி எண்ணிலா மனிதர் தம் வாழ்வு ஏற்றுள்ள உதிரம் வடிந்து கொண்டிருக்கும் இழப்புகளையும் சேர்த்தே சொல்கிறது. வெறித்தபடி கிடக்கும் பிரகாசமிழந்த விழிகள் இறந்து போன பறவைக்கு மாத்திரம் உரித்தானதல்ல. மனிதன் தன்னைச் சார்ந்த இன்னொருவருக்கு இழைக்கும் துரோகங்களாலும், துன்பங்களாலும், இழப்புகளாலும் மனது செத்துப் போன மானிடரிடத்தேயும் அதே வெறித்த பிரகாசமிழந்த கண்களைக் காணலாம். திறந்தே இருக்கிறது சிறு சொண்டு எனும் வரிகள் செத்துப் போன குருவியிடம் மீண்டும் உள்ளத்தை மீட்டு வருகிறது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து படிக்கும் போது குருவியின் உடலில் மட்டுமல்ல எமது உள்ளத்திலும் கவணின் கல்வீச்சு வந்து விழுகிறது.
வீடு பற்றிய துயர்க் கதைகள், இயற்கை, சுற்றுச் சூழல், இவையிரண்டினதும் அண்மைக் காலத் தத்தளிப்புகள், இழப்புகளை ஆற்றொணாத் துயருடனும், இரங்கலுடனும், பாடுகிற நுண்ணுணர்வு மிக்க கவிதைகள் இத் தொகுதி முழுவதும் நிறைந்துள்ளன.
- ஃபஹீமா ஜஹான்
மென்மையான மனோரதியம் கவியும் கவிதைகளும், ஆங்காங்கே மிளிரும் இந்தத் தொகுப்பு கண்ணீரையும், காதல்வயப்பட்ட நெஞ்சின் அலைகளையும் நளினமாகச் சித்திரிக்கிற போது சங்க இலக்கியத்தின் அகப் பாடல்கள் நினைவில் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இஸுரு சாமர எழுப்புகிற படிமங்களும், உருவகங்களும் புதுமையாகவும், இனிமையாகவும் உள்ளன.
- சேரன்
Be the first to rate this book.