கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, ‘தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே’ என்று சோனியாக ஒருத்தர் தொடர்ந்து கையில் ஒலிபெருக்கி வைத்து முழங்கிக் கொண்டிருப்பார்.
அவ்வப்போது யாராவது காசை நீட்ட, பக்கத்தில் வைத்த ஒரு வாளால், அல்வா மலையிலிருந்து லாகவமாக ஐந்து செண்டிமீட்டர் நீள, அகலம் மற்றும் இரண்டு செண்டிமீட்டர் கனத்தில் ஒரு துண்டை வெட்டி பூவரச இலையில் வைத்து அல்வாக்காரர் தருவார். வாங்கிச் சாப்பிட்டவர்கள் இலையை விட்டெறிந்துவிட்டு கம்பீரமாகப் பார்த்தபடி நடப்பார்கள். அல்பமான ஒரு இருபத்தைந்து காசு வீட்டுப் பெரியவர்கள் கொடுத்திருந்தால் நான் இன்னேரம் பயில்வானாகியிருப்பேன்.
Be the first to rate this book.