கோபாட் காந்தி படிப்பினை மிகுந்த தன்னுடைய பத்தாண்டுகாலச் சிறையனுபவத்தை சொந்த நினைவுகள் வழியாகவும், நினைவாற்றல் கைகொடுக்காத இடங்களில் நண்பர்களின் நினைவுப் பகிர்வுகள் வழியாகவும் பதிவாக்கித் தந்துள்ளார். பார்சி சமூகத்தில் பிறந்து, அரசியல் வாடையே இல்லாத மேட்டுக்குடி வாழ்க்கைச் சூழலில் வளர்ந்தவர், அதற்கு முற்றிலும் எதிரான பாதையைத் தேர்வுசெய்ததையும், அதனால் பட்ட இன்னல்களையும் சந்தித்த சவால்களையும் விரிவாக நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
‘இந்தியப் புரட்சியின் விடிவெள்ளி’ என்று புகழப்படும் தன்னுடைய இணையர் தோழர் அனுராதா காந்தி பற்றியும், நியாயமின்றித் தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குருவுடனான தனது உரையாடல்கள் பற்றியும் நூலிலுள்ள அவரின் பதிவுகள் மிகவுமே முக்கியமானவை. மோசமான தனது சொந்த அனுபவங்கள் வழி இந்தியக் காவல், சிறை, நீதித் துறைகள் மீதான விமர்சனமாகவும் நூல் விரிந்துள்ளது.
பெற்றோர், மனைவி, உறவினர், அண்டை வீட்டார், நண்பர்கள், வழக்குரைஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதியரசர்கள், பல வகைப்பட்ட சிறைக்கைதிகள், பத்திரிகையாளர்கள், இயக்கத் தோழர்கள், மாஃபியா குற்றக் கும்பல்கள் ஆகிய எண்ணற்ற மனிதர்களைக் காட்டுகிறார். அவர்கள் மனித இயல்புடனே வருகின்றனர். கோபாட் காந்தி எல்லோருடனும் நட்பு பாராட்டுகிறார். சிறுசிறு உதவிகளையும் நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறார். அன்புகாட்டுகிறார், உரையாடுகிறார், முரண்படுகிறார்.
அனைத்திலும் முக்கியமாக, இந்தியப் புரட்சி இயக்கத்தின் சிக்கல்கள்மீது ஆழமான பார்வைகளையும் இரக்கம் காட்டாத விமர்சனங்களையும் இந்நூலில் முன்வைத்துள்ளார். அவற்றின் வழி மார்க்சிய-லெனினிய-மாவோவியச் சிந்தனையாளராக தன்னை மறுவுருவாக்கம் செய்துகொள்ள முயன்றுள்ளார். தான் ஒப்புக்கொடுத்த பாதையில் தன்னையும் உட்படுத்தி, விமர்சனம் செய்து, இலக்கு நோக்கி மீள்வதற்கான வழிகளைத் தேடியுள்ளார்.
சமத்துவமும் சமவாய்ப்பும் கொண்ட ஓர் சமூக அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவும், பரிசீலிக்கவும் வேண்டிய மிகவும் முக்கியமான பிரதி இது.
Be the first to rate this book.