ஆயிரம் துயர இரவுகளின் இருட்டில் நின்று எழுதப்பட்டதே நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம். மனுஷ்ய புத்திரனின் படைப்பியக்கத்தின் மற்றுமொரு பேரலையாக இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது. மனித உறவுகளின் ஆழம் காண முடியாத பாழும் கிணறுகளின் நீர்மையும் கசப்பும் விநோதமும் இந்தத் தொகுப்பெங்கும் நிரம்பியிருக்கின்றன.
இன்னொருபுறம், நமது காலத்தின் மிக முக்கியமான சமூக அரசியல் பிரச்சினைகளை மிக உக்கிரமான மொழியில் மனுஷ்ய புத்திரன் இத்தொகுப்பில் எழுதிச் செல்கிறார்.
அன்பின் மரண விளையாட்டுகளை இக்கவிதைகள் பேசுவதுபோலவே ஃபிட்ஜிட் ஸ்பின்னர்கள், எமோஜிகள், பேக் ஐடிக்கள், மீம்ஸ்கள், ப்ளூவேல், ஜிஎஸ்டி, இளையராஜா, தக்காளி விலையேற்றம், ஆதார், நக்சல்பாரிகள், கெளரி லங்கேஷ், மாட்டிறைச்சிக்காகக் கொல்லப்பட்ட ஜுனைத், அமர்நாத் படுகொலை, கண்காணிப்புக் கேமிராக்கள், இந்தியா சீன எல்லைப் பிரச்சினை என சமகாலத்தின் அத்தனை நெருக்கடிகளையும் பேசுகின்றன.
இதன்மூலமாக நவீனத் தமிழ்க் கவிதையின் பரப்பை மனுஷ்ய புத்திரன் எல்லையற்றதாக மாற்றுகிறார். 2017ல் மனுஷ்ய புத்திரன் எழுதிய 609 கவிதைகளில் முதல் 100 கவிதைகள் 'பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்' என்ற தொகுப்பில் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. 509 கவிதைகள் கொண்ட இப்பெருந் தொகுதி தமிழில் நவீன கவிஞன் ஒருவனின் எல்லையற்ற சாத்தியங்களுக்கு சாட்சியமாகிறது.
Be the first to rate this book.