தமிழக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சினிமாக் கொட்டகை, அதில் பணிபுரிபவர்கள், படம் பார்ப்பவர்கள், செயல்முறைகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு அற்புதமான ஆவணம் இந்த நூல். இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வெகுஜன அனுபவங்களில் முக்கியமானவை வறுமையும் சாதிப் பாகுபாடும். இவற்றில் சிக்கியிருந்த மக்களிடம் மிகுந்த பரிவுடன் ஊடாடிய கலைச்சாதனமாகத் தமிழ் வெகுஜன சினிமா இருந்தது. எந்த மானுட மாண்பு வறுமையையும் சாதிப் பாகுபாட்டையும் கடந்து உறவுகளைச் சாத்தியமாக்கியதோ, அந்தக் கலாசார ஆற்றலில் இருந்துதான் வெகுஜன சினிமா தன் செயல்தளத்தை உருவாக்கிக்கொண்டது. இந்த நூல் அதற்கு சாட்சி.
சுயவரலாற்றுத்தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கும் பெருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இந்த நூல் முழுவதும் அவர் இருக்கிறார். ஆனால், அவர் கவனப்படுத்திய எண்ணற்ற விஷயங்களில் கலந்து பரவியிருக்கிறார் என்பதுடன் அவற்றால் உருவாக்கப்பட்ட சுயத்தைக் கொண்டவராக இருக்கிறார். சுய வரலாற்று எழுத்துக்களை மேற்கொள்ளும் யாருக்கும் இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இந்நூலில் பெருமாள்முருகன் கோட்பாட்டாக்கம் செய்யவில்லை; எதையும் நிறுவவில்லை. நினைவுகளின் அடிப்படையில் அனுபவித்ததையும் உணர்ந்ததையும் கூறியிருக்கிறார். இதில் வெளிப்படும் உலகமும் மானுட உறவுகளும் அசாதாரண முக்கியத்துவத்தை இந்த நூலுக்கு வழங்குகின்றன.
- ராஜன் குறை
Be the first to rate this book.