பானுமதி கதை தேர்ந்தெடுக்கும் களத்தையும், சம்பவத்தையும் ஒருவித மனக்கட்டுப்பாட்டோடு விரிக்கவும் செய்து, சுருக்கவும் செய்கிறார். சொற்களை தேர்ந்தெடுத்து கதைகளில் பயன்படுத்த முனைகிறார். பெண்கள் எழுதும் கதைகளில் வருகிற ஆண்களின் பாத்திரங்களின் குணங்களை மிக இலகுவாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் பானுமதியின் கதைகளில் வருகிற ஆண்கள் மனவுலகம் குறித்த எனது முன்தீர்மானங்கள் இந்தத் தொகுப்பில் பொய்த்துப்போய் இருந்தன.
பானுமதியின் எழுத்துவ மனம் விழுமிய நேர்த்திகளோடு இயங்குகிறது. இவ்வுலகில் ஏமாற்றுபவர்களை சாடவில்லை, தாக்கவில்லை ஆனால் ஏமாறுபவர்களை எழுதுகிறது. அவர்களுக்காக அதீதமான கரிசனத்தைக் காண்பிக்கிறது. மொழியின் விளிம்பில் நின்று இன்னொரு வெளிக்குத் தாவிப் பாயும் பயிற்சியில் பானுமதி சிறுகதைகளை எழுதுகிறார்.
பொதுவாகவே பெண்களிடமிருந்து வருகிற உரைநடைகளில் இருக்கக்கூடிய பொதுப்பண்புகள் இந்தத்தொகுப்பில் மிகக்குறைவாகவே இருக்கிறது. அவ்வகையில் இன்றைய மனத்தின் பெண் கதைகள் வேறொன்றுக்கு நகர்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
- அகரமுதல்வன்
Be the first to rate this book.