கேரளத்திலிருந்து கசிந்து வரும் நீரினால் உருவான வைப்பாறு, வரும் வழியெங்கும் பசுமை வளம் கொழிக்கச் செய்கிறது. மகிழ்ச்சியோடு விவசாயிகள் வாழுகிறார்கள். நவீன காலக் கொள்ளைகளால் ஆறு வளம் குறைந்து மக்கள் வாழ்வு சீரழிகிறது. இதைப் பொதுமக்கள் சகித்துக் கொண்டனர். இடையில் ஒரு நம்ப முடியாத கதை கூறப்படுகிறது. குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துக் கைப்பற்றினான். அவன் பாண்டிய நாட்டு மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டுமென்று கேரளத்திலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த ஆறுகளை மேற்கு நோக்கித் திருப்பிவிட்டதாய் கதை கூறுகிறது. ஆறுகளைத், ‘திசை திருப்பியதாய்’ கூறப்படும் கதை ஒருவேளை சோழன் மீதான கோபத்தில் உருவான கட்டுக்கதையாக இருக்கலாம். நாவல் ஒரு நூறாண்டு கால உமிழ்வைச் சொல்கிறது. நாவல் சாத்தூரை மையங்கொண்டுள்ளது. கதை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது. மன்றோ கட்டிய பாலம் அதைக் காட்டுகிறது. ஒருகாலத்தில் கல்லுக்காட்டில் கூட விவசாயம் செய்ய வைத்த வைப்பாறு வறண்டு போனது மக்களின் வாழ்வை சோகத்தில் ஆழ்த்துகிறது. அத்தகைய குடும்பங்களின் அவலக் கதைகள் இதில் தொடர்ச்சியாக வருகின்றன.பிரிட்டிஷ் ஆட்சியைப் போலவே விடுதலைக்குப் பிறகும் போலீஸ் அட்டூழியங்கள், லஞ்சம் ஊழலும் அதிகரித்து சாமானிய மக்களின் வாழ்வைச் சூறையாடுகின்ற காட்சிகள் துயரத்தைத் தருகின்றன. மக்கள் கோவிலுக்குப் பெருங்கூட்டமாய் தாய் பகவதியாவது காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையில் சென்று தங்க, அங்கும் ரௌடிகள், போலீஸ் அட்டூழியங்களுக்கு ஆளாகிறார்கள். அந்த இருண்ட காட்சிகளில் நாவல் வாசகனையே மிரட்டுகிறது. இரவில் கோவில் பகுதியில் கூட்டமாய்த் தங்கி தூங்கும்போது ரௌடிகள் வந்து பெண்களை வாயைப் பொத்தி தூக்கிப் போய் வல்லுறவு செய்து கொலை செய்வதும் அங்கு வாடிக்கை. மணலைப் பறிகொடுத்த ஆறு எலும்புக்கூடுதான். அதில் சீமைக் கருவேலங்காடு வளர்ந்து அது பல செயல்களுக்கு மறைவிடமாகிறது. அக்காட்சிகளில் வட்டார வழக்கில் கூறப்பட்டுள்ளவை நம்மை விழுந்து சிரிக்க வைக்கின்றன. இந்த நையாண்டி இலட்சுமணப்பெருமாளுக்கு கை கண்ட கலையாகும். விவசாயம் சீரழிந்த பின் பேனா நிப்பு, தீப்பெட்டி போன்ற தொழில்கள் வந்தன. இன்று நிப்புத் தொழிலும் அழிந்துவிட்டது. தீப்பெட்டி ஆபீசுகளும் எந்திரங்களின் வருகையால் களையிழந்து போயுள்ளன. கடைசியாய்ப் பார்த்தால் சாத்தூர் வெள்ளரிக்காயும், சேவும்தான் மிச்சம். நாவலின் மையச்சரடாக இருப்பது ஒரு தகரக்குழாய்தான். அதற்குள் வெள்ளை அதிகாரி எழுதிக் கொடுத்த பட்டாபத்திரம் உள்ளது. அது மன்றோ குடும்பத்திற்கு இருநூறு ஏக்கர் நிலம் தானமாய் வழங்கப்பட்ட பத்திரம். அதைச் கொண்டுபோய் ஒரு வக்கீலிடம் காட்ட அவன் மோசடி செய்கிறான். உரியவர்கள் வறுமையில் வாட வக்கீல் கொழிக்கிறான். இறுதியில் உண்மை வெல்கிறது. எளிய விவசாயி மக்களின் துயரங்கள், கீழ்தட்டு மக்களின் தவிப்பு என வாசிக்கும் நம் மனதை வாட்டுகிறது நாவல்.
Be the first to rate this book.