துடிப்பான மற்றும் பிரகாசமான வண்ணங்கள் ஒலியைக் காட்டிலும், உங்கள் கவனத்தைப் பிடித்து இழுக்கும் பலம் வாய்ந்தவை. படத்தின் மையக்கருத்தானது, ஒவ்வொரு ஷாட்டிலும் வெளிப்படுகிறது. காட்சியில் வண்ணங்களைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அழகியல் தேர்வாக இருந்தாலும், அவை பார்வையாளர்களின் பல்வேறுபட்ட மனநிலை மற்றும் ஆழ்மன உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது.
ஒரு வண்ணத்தை நம்முன் வைத்தால், அது நம்மையறியாமலேயே, உணர்ச்சிப்பூர்வமாக, மனோதத்துவரீதியில் இன்னும் உடல்ரீதியாகக் கூட நம்மீது தாக்கத்தைச் செலுத்துகின்றன. ஒரு காட்சியில் பதற்றம் அல்லது நல்லிணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வண்ணத்தைப் பயன்படுத்தி அதிகரிக்கமுடியும். திரைப்படத்தின் முக்கியக் கருப்பொருட்களை, வண்ணத்தைக்கொண்டு பார்வையாளர்களைக் கவனிக்கச்செய்ய முடியும்.
வண்ணங்கள் உளவியல் ரீதியாக, கதை சொல்லலிலும், பார்வையாளர்களிடமும் பாதிப்புச் செலுத்துகின்றன. மாலைநேர சூரியனின் மஞ்சள் நிறம் நம்பிக்கை தருகிறது. வன்முறையின் நிறமான சிவப்பு, பார்ப்பவர்களின் மனநிலையை வசியப்படுத்துகிறது,. உள்நோக்கிப் பயணப்படுகிற வல்லமை கொண்டது நீலப்பச்சை(turquoise). நேர்த்தியான படங்களில் ஒவ்வொரு வண்ணமும், இயக்குனர் தேர்ந்தெடுத்த முடிவின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறதே தவிர, தற்செயல் நிகழ்வோ, விபத்தோ அல்ல. இயக்குனர்கள் கவனமாக ஒவ்வொரு சட்டகத்தையும் உருவாக்கி, மிகச்சிறந்த பார்வை அனுபவத்தைக் கொடுப்பதற்காக வண்ணங்களைக் கண்ணுங்கருத்தமாக பயன்படுத்துகிறார்கள். அது கடத்தும் உணர்வினை நீங்கள் வெளிப்படையாக அறியாவிட்டாலும், மறைமுகமாக அந்த வண்ணம் பயன்படுத்தப்பட்டடதற்கான நோக்கத்தை அடைந்துவிடுகிறது.
இதற்கு மிகப் பொருத்தமான உதாரணம், Schindler’s List. அதில் ஒரு சிறுமியை மட்டும் சிகப்பு உடையில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பின்னணியில் மற்ற அனைத்துமே கருப்பு, வெள்ளையில் இருக்கும். எங்கும் யூதர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர். அவ்வேளையில் இந்தச் சிறுமி அங்குமிங்கும் சிவப்பு உடையில் அலைந்து கொண்டிருப்பாள். காட்சியில் இவள் வருகிறபொழுதெல்லாம் பார்வையாளர்களின் இதயம் படபடக்கும். ’சிறுமிக்கு ஏதேனும் ஆகிவிடுமோ!’ என்று கவலைகொள்வார்கள். இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூட, அச்சிறுமியின் உடையை வேண்டுமென்றேதான் வண்ணத்தில் கொடுத்து, காட்சியியல் ரீதியாகப் பதற்றத்தை அதிகரிக்கிறார். இதுபோன்ற வண்ணப்பயன்பாடுகள் பற்றிய பல உதாரணங்கள், இந்நூலில் ஓவியங்கள் வாயிலாகவும், காட்சியியல் ரீதியாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன.
வண்ணங்கள் பற்றிய புரிதலையும், வண்ணக்கோட்பாட்டையும், சினிமாக்களில் அது கட்டமைக்கப்படுகிற விதம்குறித்தும், இந்தப் புத்தகத்தின் வாயிலாகத் தெரிந்துகொள்ளமுடிகிறது.
Be the first to rate this book.