நிறைகுளம்... எங்கள் பதிப்பகத்தின் அறுபதாவது வெளியீடு. இதை நாவல் என்று குறைத்து சொல்லிவிட என் மனம் விரும்பவில்லை. இது ஒரு காவியம். தண்ணீருக்குத் தத்தளிக்கும் ஒரு எளிய கிராமத்தின் கதை. வெள்ளைக்காரர்கள் ஆண்ட போதும் அதன் பிறகும் அந்த மக்கள் படும் அவதி எழுத்துக்களில் அடங்காததுதான். ஆனால் பெ.மகேந்திரன் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளருக்கு அது கைகூடி வந்திருக்கிறது. வறட்சியின் கோரத்தாண்டவத்தை அரிதாக பெய்து கெடுக்கும் மழையின் துயரத்தைத் தன் அழியா நினைவுகளின் வழியே எழுத்துக்களாக வார்த்த கொண்டு வந்திருக்கிறார் அவர். ஏற்கனவே அவருடைய "வெள்ளாமை' நாவல் எடுத்துலகில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. சுற்றிலும் தொழிற்சாலைகள், அவற்றின் மிருகத்தனமான லாப நோக்கங்கள்... அவற்றையும் மீறி ஒரு விவசாயி தன் வயலை எப்படி நேசிக்கிறான் என்பதை எடுத்துச் சொன்ன நாவல் அது. வெகு நாட்களுக்குப் பிறகு நான் வரிவரியாக நேசித்து படித்த நிறைகுளம் நாவலை பதிப்பித்து மக்களிடம் ஒப்படைக்கும் இந்த சேவைக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். மழை மறைவு பிரதேசமாக சிக்கிக்கொண்ட ஒரு கிராமம் மழைக்காக ஏங்கித் தவிப்பதும் ஒரு சிறிய அணை கட்டி அங்கே நீர் சேர்க்க முடிந்தால், கால்வாய் வெட்ட முடிந்தால் அந்த கிராமம் எப்படி எல்லாம் செழிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலையும் இந்த நாவல் தருகிறது. ஆட்சியாளர்களிடம் இந்த நாவல் சென்று சேர வேண்டும், அந்த மக்கள் படும் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்பட வேண்டும் என்பதே இந்த நாவலின் அடிப்படை. இந்த நாவல் சொல்லும் மக்களின் கதைகள், அவர்களுக்கான கிளைக் கதைகள், அழகான முடிச்சுகளோடு ஒவ்வொன்றாய் இணைத்து பின்பு ஒவ்வொன்றாக அவழ்க்கும் எழுத்தாளரின் திறமைக்கு தமிழ் வாசகர்கள் நிச்சயம் மகத்தான இடத்தை வழங்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை. நாவல் எங்கெங்கெல்லாம் சென்று சேர வேண்டுமோ சென்று சேர வேண்டும், நாவலின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே எனது ஆவல். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செவி சாய்பாபார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு நாவல் நிறைவேற்ற போகும் மகத்தான நன்மையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
Be the first to rate this book.