நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் அல்ல... பக்தி இலக்கியத் துறையிலும் சாதனை படைத்து ‘காவியக் கவிஞர்’ என புகழ் மாலை சூட்டப்பட்டவர். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் போன்ற படைப்புகள் வாலியின் வலிமை!
கவிதை, கட்டுரை, பேச்சு, நடிப்பு, பாட்டு, ஓவியம் என பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் வாலி, தமிழில் புதிய சொல்லாட்சியை ஏற்படுத்திய கலை வித்தகர். திரைத் துறையில் பாடல் எழுதிய அனுபவங்களையும், அவருடன் பழகிய நெஞ்சுக்கினிய நேசர்களையும், அந்தரங்கமான நிகழ்வுகளையும் உள்ளது உள்ளபடியே அவர் சொல்லும் வார்த்தைகள் மனதை வசீகரிக்கின்றன! சைக்கிளில் ‘குரங்குபெடல்’ போட்டது, பள்ளிப் பருவத்தில் நாடகம் போட்டது, பத்திரிகையில் கவிதை எழுதியது, திருச்சி வானொலியில் பணியாற்றியது, கம்பன் கழகம் கவியரங்கில் தலைமை தாங்கியது, டி.எம்.எஸ்., சந்திப்பால் சென்னைக்கு வந்து, நாகேஷ் உடன் சேர்ந்து சினிமாவில் போராடிக்கொண்டு இருந்தது... என அத்தனை நிகழ்வுகளையும் மிகுந்த நினைவாற்றலோடு இங்கு பதிவுசெய்திருக்கிறார் வாலி.
அவர் பாடல்கள் எழுதிய சம்பவங்களைச் சொல்லும்போது, நம் நினைவுகளும் அந்தந்தக் காலகட்டத்துக்கு விரைகிறது. 50 அத்தியாயங்களில் 80 ஆண்டு நினைவுகளைப் பதிவுசெய்து இருக்கிறார். ‘அனுபவமே அழியாத பெரும் சொத்து; நினைவே சுகம்!’ என்பதை தன் எழுத்தில் நிரூபித்திருக்கிறார் கவிஞர் வாலி.
Be the first to rate this book.