ஒரு கல்லூரி வாழ்க்கையைத்தான் இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. மருத்துவராகும் லட்சியத்துடன் மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் கீர்த்தி, ஒவ்வொன்றையும் பிரமிப்புடன் பார்க்கிறாள்; தயக்கத்துடன் அணுகுகிறாள். கல்லூரியிலும் விடுதியிலும் அவளுக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைக்கின்றன; நண்பர்கள் உருவாகிறார்கள்.
ராகிங்குக்குத் தடை வந்த காலகட்டம், இறந்த உடலையும் ரத்தத்தையும் கண்டு மயங்கி விழும் மாணவர்கள், நூறாவது நாள் கொண்டாட்டம், மாணவர் போராட்டம், மனித எலும்புக் கூடுகளை வைத்துப் பாடம், படிக்கும்போதே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், ஆண் - பெண் சிக்கல்கள், ஹவுஸ் சர்ஜன்களின் நிலை... இப்படி நம்மில் பலரும் அறியாத பின்னணியில் சுவாரஸ்யமாகச் செல்லும் கதை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களின் சந்திப்போடு முடிவடைகிறது.
பெரும்பாலும் யாரும் இதுவரை எழுத்தில் வடித்திராத மருத்துவக்கல்லூரி வாழ்க்கையை, மருத்துவரான நாவலாசிரியர் மிக இயல்பாகவும் உண்மையாகவும் சொல்லியிருக்கிறார். அதுவும் எளிய, இனிய, தாமிரபரணிக்கே உரிய எழிலான மொழிநடையில். எளிமையே அழகு என்பதற்கான அண்மைக்கால உதாரணம் அகிலாண்ட பாரதியின் இந்த எழுத்து.
- வள்ளிதாசன்
Be the first to rate this book.