பார்க்கும் காட்சி, படிக்கும் விஷயம், சில சமயம் கேட்கும் ஓர் ஒற்றைச் சொல், பல சமயம் நண்பர்கள் பகிர்கிற விஷயங்கள், கிளர்த்தும் கானங்கள், சில சந்தோஷத் தருணங்கள், விச்ராந்தியான மனோ நிலை, தன்னெழுச்சியாக சிலவேளை, தாளாத வலி இவையே என்னைப் பெரும்பாலும் எழுத வைத்துள்ளன. ஒரு தலைப்பில் ஒன்றை எழுதிவிட வேண்டும் என்று உடனே உட்கார்ந்து சரசரவென என்னால் எழுத முடிந்ததில்லை. எது ஒன்றினாலும் உள்வாங்கும் உணர்வு என்னுணர்வாய் மாறுகையில் கவிதை தானே வெளிப்பட்டுவிடும்.
சமூகம், மேவல், உறவுகள், சில அபூர்வ தனி மனிதர்கள், சக மனுஷிகள் சார்ந்த கரிசனங்கள், சுய விசாரணை, இயலாமை, இயற்கை இப்படிப் பல பிரிவுகளில் இதில் கவிதைகள் உள்ளன. மற்ற தொகுப்புகளைப்போலவே இந்தத் தொகுப்பிலும் கோயில், இசை போன்ற விஷயங்கள் தனித்தன்மையோடு இடம்பெற்றுள்ளன. என் கவிதைகளில் ஒருவித இசைத்தன்மை இயைந்து வருவதை விரும்புவேன். சங்கீதம் சார்ந்த நாட்டத்திலிருந்து தோன்றும் அவா அது. இசை தரும் அனுபூதிக்குப் பக்கத்தில் கவிதையை நிறுத்தவே முயன்றுகொண்டு இருக்கிறேன்.
பாரதிக்குப் பிறகு பிச்சமூர்த்தி பாணி, பாரதிதாசன் பாணி என்ற இரு போக்குகளையே இன்று வரை கவிதையில் கொள்கிறோம். ஆனால் எந்த கவிதைப் பாணியாய் இருந்தாலும் கவித்துவத்தையே நாம் பிரதான அம்சமாகக் கருதி வந்திருக்கிறோம். மற்றவை தோன்றிய வேகத்தில் உதிர்ந்து மறைவதையும் கண்ணுறுகிறோம்.
Be the first to rate this book.