‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின் சுவையான உரையாடல்கள் எவர் ஒருவரும் கொண்டாடக் கூடியவை. உணர்ச்சிப் போக்கும் உரையாடல் போக்கும் கலந்த நாடகத் தன்மையுடன் கூடிய விவரிப்பு நடையை அவரது எழுத்துக்களில் காணலாம். நேரிடையாகத் தெளிவான மொழியில் எவ்வித அலங்காரமுமின்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவர் காலச்சூழலையும் வரலாற்றுப் பின்புலத்தையும் அறிய முடிவதோடு இன்றும் வாசிப்புத்தன்மை கொண்டு வசீகரிப்பன இக்கட்டுரைகள். 1901இல் சுதேசமித்திரனில் தொடங்கிப் பின்பு தென்னிந்திய வர்த்தமானி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணி, தாருல் இஸ்லாம் எனப் பல்வேறு பத்திரிகைகளில் கிளை பரப்பியது அவரது எழுத்தாற்றல். வெகுசன ஊடகம் சார்ந்தும் வெற்றி பெற்ற கட்டுரைகள் இவை.
சாமிநாதம் (2015) என்னும் நூலின் மூலமாக உ.வே.சா.வின் முன்னுரை களை முழுவதுமாகத் தொகுத்துப் பதிப்பித்த ப.சரவணன் தற்போது அவரது கட்டுரைகளின் மூலத்தைத் தேடிச் சென்று ஒருசேரத் தொகுத்து அவற்றைப் பொருண்மை அடிப்படையில் பகுத்துச் செம்பதிப்பாக ஆக்கியுள்ளார். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆவணப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்திவரும் சரவணன் திருப்பூர் ‘தமிழ்ச்சங்க விருது’, ‘தமிழ்ப்பரிதி விருது’, ‘தமிழ்நிதி விருது’, ‘சுந்தர ராமசாமி விருது’ ஆகியவற்றைப் பெற்றவர். தற்போது சென்னை மாநகராட்சி பள்ளி ஒன்றில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.