நவீனக் கவிதைகள் எனும் பெயரில் இன்று வந்துகொண்டிருக்கும் தட்டையான சொல்முறையை மகாராசன் அறவே தவிர்த்திருக்கிறார். கண்ணையும் மண்ணையும் விரிக்கும் இடத்திலெல்லாம் அவருக்குக் கவிதைகள் கிடைத்திருக்கின்றன.
நூல் முழுவதிலும் வயல்வாடை வீசுகிறது. உழவுக்குடியின் உக்கிரங்களும், ஓலங்களும் வேகத்துடன் வெளிப்படுகிறது. கசிந்துருகும் காதலைக்கூட மண்ணில் புரட்டி எடுத்த சொற்களைக்கொண்டே தீட்டியிருக்கிறார். நேரடித் தன்மையுடன் கவிதைகள் அமைந்திருந்தாலும், தோண்டத் தோண்ட வெவ்வேறு பொக்கிஷங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
- கவிஞர் யுகபாரதி
மகாராசன் கவிதைகளில் நிலவியல், சூழலியல் சார்ந்த சிந்தனைகள்தான் நெல் முத்துக்களெனச் சொல் முத்துக்களாய் விரவிக் கிடக்கின்றன. நிலத்தின் கம்பீரம்தான் இவருடைய கவிதைச் சொற்களின் ஈரமாக இருக்கின்றது. நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் குயவர் பிசையும் மண்குழைவுபோலக் கவிதைகளில் ஒட்டிக் கிடக்கின்றன.
இவரது கவிதைகள் வெவ்வேறு பாடுபொருட்களையும் கருப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன என்றாலும், எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒருவகையில் நிலத்தைத்தான் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலத்தில் முளைத்திருக்கும் சொற்கள், எங்கோ ஒரு மூலையில் ஒளித்து வைத்திருக்கக் கூடிய வாழ்வின் இரகசியங்களை, கடந்து வந்த அனுபவங்களை. இழந்துபோன வாழ்வின் சொர்க்கத்தை மீட்டெடுப்பதற்குத் துடிக்கின்றன.
- முனைவர் அரங்க மல்லிகா
Be the first to rate this book.