'எப்போதும் உன் மீது காதலில் கசிந்துருகிக் கொண்டே இருக்கிறேன்' போன்ற பாவனைகளை விட்டொழியுங்கள். காதல் ஒருபோதும் அதன் உச்சத்தில் திகழ்ந்துகொண்டே இருக்காது; அவ்வப்போது வரும், போகும் என்ற அளவிலேயே காதல் இருக்கும். 'உன்னைக் காதலிக்கிறேன்' என்றால், 'ஒரு நாளின் எல்லா பொழுதுகளிலும் 24 மணி நேரமும் உன்னைக் காதலித்துக் கொண்டிருப்பேன்' என்று பொருளல்ல. ஆனால் நாம், '24 மணி நேரமும் உன்னைக் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன்' என்று வெளிக்காட்டிக்கொண்டே இருக்க விரும்புகிறோம். ஏனெனில் அஞ்சுகிறோம். இந்தக் காதலில் இருந்து அவர்கள் பின்வாங்கி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம்.
நீ என்னை விட்டுப் போகவே கூடாது என்பதற்காக, ”நான் உன்னை எத்தனை எத்தனை காதலிக்கிறேன் பார்!" என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறோம். அதோர் பாவனை என்று நமக்கே தெரிந்தும் இருக்கிறது. பாவனையின் மூலமாக அவர்களைத் தக்கவைத்து விடமுடியும் என்று நம்புகிறோம். இறுதியில் நாம் காட்டிய பாவனைதான் நிஜம்: 'நான் உன்னை எந்நேரமும் காதலித்துக் கொண்டுதான் இருந்தேன்' என்று நம்பவும் ஆரம்பித்து விடுகிறோம். 'நீதான் அப்படி என்னைக் காதலிக்கவில்லை' என்று கோபப்படத் தொடங்குகிறோம். பாவனைகளை விட்டொழியுங்கள். எந்நேரமும் காதல் கசிந்துருகாது என்பதை உணருங்கள். சில பொழுது காமம் பொங்கும், சில பொழுது அன்பு பெருகும், சில பொழுது சும்மா பேசிக்கொண்டிருக்கத் தோன்றும். சில பொழுது வெறுப்பும் கோபமும் மட்டுமே இருக்கும், சில பொழுது எந்த உணர்வுமே இருக்காது. வெறுமையாக இருக்கும். வெறுமையான பொழுதுகளை, 'என்னாச்சு, என்னாச்சு? என சீண்டாமல் இருக்கப் பழகும்போதுதான் ஒரு காதல் அதன் தன்னியல்பில் இருந்து மாறாமல் இருக்கும்.
- யாத்திரி
Be the first to rate this book.