சமீபகாலமாக ‘உணவே மருந்து’ என்னும் சொல் உலகெல்லாம் ஓங்கி ஒலித்து வருகிறது. நம் முன்னோர்களும் இதைத்தான் சொன்னார்கள். இதையே செய்தார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். உடலைப் பேணிக் காத்தார்கள். ஒரு நூற்றாண்டையும் கடந்து உயிர் வாழ்ந்தார்கள். இயற்கை உணவு நம்மை வாழவைக்கும். குறிப்பாக, கடலில் இருந்து கிடைக்கும் மீன் உணவு நமக்கு வலிமை சேர்க்கும். இன்று ‘அவசியம் மீன் சாப்பிடுங்கள்' என்று சொல்லாத மருத்துவர்களே இல்லை. இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு அதிகரித்து உடல் பருமனாகிப் போனவர்கள் யாவருக்கும் மீன் உணவு ஒரு வரப்பிரசாதமாகும். மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, உடல் திடம், புத்திக் கூர்மை என்று மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மீன் உணவு. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற ஒரு வகை திரவ சக்தி, வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க, இந்த திரவ சக்தி பெரிதும் உதவுகிறது. அமெரிக்காவில் தாய்மார்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளைவிட, அறிவுக்கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. நெய்தல் நிலமான கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, கனவா போன்ற அசைவ உணவு வகைகளை சுவையாக பல விதங்களில் சமைப்பது எப்படி? அதாவது நாவிற்கு இனிய ருசியாக சமைப்பது எப்படி? என்ற ரகசியத்தை இந்த நூல் நமக்குச் சொல்லித் தருகிறது. புகழ்பெற்ற சமையற் கலை வல்லுநர் செஃப் தர் அவர்கள் பல்வேறு சுவை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர். எண்ணற்ற கடல் உணவு வகைகள் நமக்காக காத்திருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சுவை அறிய... பக்கத்தைப் புரட்டுங்கள்!
Be the first to rate this book.