ஷமீலாவின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம் அவர் கையாளும் இயற்கை பற்றிய படிமங்கள். அவருடைய ஓவியங்களிலும், புகைப்படங்களிலும் காணப்படும் இயற்கையின் அழகிய விம்பங்கள் அவருடைய கவிதைகளிலும் பரவலாக இடம்பெறுகின்றன. தன் உணர்வுகளையும் அனுபவங்களையும் இவற்றின் ஊடாகவே அவர் வெளிப்படுத்துகின்றார். கடலும் நதியும், கோடையும் மாரியும், மரங்களும் செடிகளும் மலர்களும், விலங்குகளும் பறவைகளும், வானமும் நிலவும் என அவரது கவிதைகள் இயற்கைப் படிமங்களால் நிறைந்துள்ளன. அவருடைய எழுத்துக்களில் அவை புதிய அர்த்தங்கள் பெறுகின்றன.
- பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்
ஷமீலாவின் மொழி, மர்மக் கிணறுகளை மறைத்து வைத்துள்ள பச்சைக் கண் பூனையின் மென்மையான சுவடுகளைப் போன்றது. விபரிப்புகளுக்கும் நிசப்தங்களுக்கும் நடுவே எப்போதுமே சொல்ல முடியாத ஒன்றை, தனக்கேயான பிரத்தியேக வண்ண சமிக்ஞைகளில் ஆழ்ந்து உணர்த்தக் கூடியது. பெண் இருப்பை ஷமீலா சில சமயங்களில் கண்ணாடி மீன்கள் என்கிறார். அல்லது இறக்கைகள் கொண்ட பறவை என்கிறார். அவருடைய பாரம்பரியத்திலிருந்து அகழ்ந்து வரும் முத்துக்களால் அவர் உருவாக்குகின்ற கவிதைச் சித்திரங்கள் நவீனமும் தொன்மமும் இரண்டறக் கலந்துள்ளவை. அச்சித்திரச் சுவரின் முன்னே அனைத்திலும் பாதியைத் தொலைத்துவிட்ட நிலையில் மனதின் மாசற்ற பாடலுடன் நிற்பது ஒரு பெண்தான்.
- கவிஞர் அனார்
Be the first to rate this book.