உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நீதிநூல்கள் உளவெனினும், நம் செந்தமிழ் மொழியில் உள்ள நீதிகள் அளவிறந்தனவாம். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசும். இவற்றின் விளக்கத்தைச் சுருக்கமான சூத்திரமாக ஈதல்அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்; எந்நாளும் காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. என்று ஒளவையின் தனிப்பாடல் ஒன்று கூறுகிறது. இந்த விளக்கத்திற்கு விரிவுரைபோல் அமைந்தவைதாம் எல்லா நீதி நூல்களும். மனிதனுடைய எல்லா முயற்சிகளும், செயல்பாடுகளும் இன்பத்தை எதிர்நோக்குவனாகவே உள்ளன. இன்றைக்கு இன்பமாய் இருப்பதே இன்னொரு நாள் துன்பமாக மாறிப்போய் விடுகிறது. வாழ்வாங்கு வாழும் வழிவகைகளைக் கூறி, மனிதனைப் பேரின்பமாகிய வீடுபேற்றை அடைவதற்கு ஆற்றுப்படுத்துபவையே நீதி நூல்கள். நீதி நூல்கள் கூறும் கருத்துவிதைகள் எப்பாலவர் நெஞ்சிலும், எப்பருவத்தினர் நெஞ்சிலும் தூவப்பட வேண்டியவை. ஒரு நாள் இல்லா விட்டால் ஒரு நாள் அவற்றின் நல்விளைச்சலை உறுதியாய்ப் பெறலாம். சூட்டப்பட்ட பெயருக்குப் பொருத்தமாக விளங்குபவர்கள் மிகச் சிலரே.
Be the first to rate this book.