நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%, பாலில் 87%, முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் சின்னஞ்சிறு மண்புழுவின் உடல் 80% நீர். நீர்நில வாழ்வியான தவளை என்பது 78% நீர், கடலில் மிதக்கும் ஜெல்லி மீன் 95% நீர். நம் உடல் கூட 65% நீர்தான். இது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். ஒல்லியான மனிதர் தன் உடல் எடையில் 70% நீராகக் கொண்டிருக்கலாம். அதேவேளை பெண் தன்னுடலில் சேமிப்பான கொழுப்பின் காரணமாக உடல் எடையில் 52% நீரை மட்டுமே கொண்டிருக்கக்கூடும். உடல் பல வழிகளில் நீரைப் பெறுகிறது. அருந்துவதன் வழி 47%, உணவிலிருந்து பெறுவது 39%, செல்லுலர் ரெஸ்பிரேசன் எனும் வேதியியல் செயற்பாட்டின் வழியும் 14% நீர் உருவாக்கப்படுகிறது. இதையெல்லாம் சிந்திக்கும் நம் மூளை என்பது 74.5% நீர். உடலில் ஓடும் குருதியில் 83% நீர். நுரையீரல் என்பது 70% நீர்; சிறுநீரகம் 82.7% நீர்; தசை என்பது 75.6% நீர். ஒருவரை எலும்பும் தோலுமாய் இருக்கிறார் எனக் கேலி செய்வோமே, அத்தோலில் இருப்பது 64% நீர்; எலும்பும் கூட 22% நீரே. நம் உடலிலுள்ள டிஎன்ஏ மூலக்கூறும் நீராலானது. பல நூறு கோடிக்கணக்கான நீர் மூலக்கூறுகள் அதில் உள்ளன. அதன் சுழல் ஏணி வடிவத்தைக்கூட நீரே தீர்மானிக்கிறது. நீர் இல்லாவிடில் நம் டிஎன்ஏவே அழிந்துவிடும். நம் உடல் நீரில் 1% குறைந்தால் அதற்குப் பெயர் தாகம். அதுவே 12% குறைந்தால் அதன் பெயர் மரணம். இவ்வளவு ஏன்? நீரில்லாது நம் மூச்சுக்கூட வெளிவராது. நம் ஒருநாள் மூச்சில் வெளியாவது ஒரு கோப்பை நீர்.
5
Inbaraj A 08-08-2020 08:43 pm