சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று, விடுதலை வேள்வியின்போது நமது தலைவர்கள் முழங்கினர். நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - என்று மகாகவி பாரதி எழுதினான். நம்முடைய உரிமைகள் என்ன என்றுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் வாழும் மக்கள் நம் நாட்டில் அதிகம். உரிமைகளைப் போராடிப் பெறுவது; கடமைகளைக் குறைவின்றிச் செய்வது; இவை இரண்டும் இணைந்த சமுதாயமே வெற்றிபெற்ற சமுதாயமாகும். இந்த உலகில் நம் அனைவரின் அடிப்படைத் தேவையாக விளங்குபவை உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இவற்றைப் பெறுவதற்கு ஏதோ ஒரு தருணத்தில், நாம் அந்தப் பொருள்களின் பயனை அனுபவிக்கக்கூடிய பயனாளிகளாக, அதாவது நுகர்வோராக மாறுகிறோம். முதலில், நுகர்வோர் என்பவர் யார், முறையீட்டாளர் என்பவர் எப்போது அதற்குரிய தகுதியைப் பெறுகிறார், பொருள் நுகர்வின்போது ஏற்படும் நூதன முறைகேடுகள் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன, நுகர்வின்போது நாம் எப்படி விழிப்போடு இருந்து தவறைக் கண்டுபிடிப்பது போன்ற பலவித கேள்விகளுக்கான பதில்கள் நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.
Be the first to rate this book.