கவின் மலர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவர். பெற்றோர்: சரோஜா - காவியன். தந்தை பெரியார் நடத்தி வைத்த இறுதியும் மூன்றாவதுமான இந்து - முஸ்லிம் திருமணம் இவர்களுடையது. அகில இந்திய வானொலியின் காரைக்கால் பண்பலையில் சிறிதுகாலம் அறிவிப்பாளராய் இருந்த கவின் மலர், பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். அதன்பின் ஊடகத்துறைக்குள் நுழைந்தார். ‘புதிய தலைமுறை’, ‘ஆனந்தவிகடன்’ போன்ற இதழ்களில் பத்திரிகையாளராய் பணியாற்றினார். தற்போது ‘இந்தியா டுடே’ இதழில் பணிபுரிகிறார். அ. மங்கையின் ‘மரப்பாச்சி’, பிரளயனின் ‘சென்னைக் கலைக்குழு’, ஞாநியின் ‘பரீக்ஷா’, ஸ்ரீஜித் சுந்தரத்தின் ‘கட்டியக்காரி’ ஆகிய நாடகக் குழுக்களின் நாடகங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நாடகத்துறையில் அரங்கக் கலைஞராகவும் இசைப்பாடகராகவும் இயங்கிவருகிறார். இவரது முதல் சிறுகதை ‘இரவில் கரையும் நிழல்கள்’, நவம்பர் 2010 ‘உயிர் எழுத்து’ இதழில் வெளியானது. காஞ்சா அய்லய்யாவின் நேர்காணல் இவருடைய மொழியாக்கத்தில் ‘இந்து ஆன்மிகமே பாசிசம்தான்’ என்கிற தலைப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. காஞ்சா அய்லய்யாவின் ‘எருமை தேசியம்’ நூலை டாக்டர் ஜீவானந்தத்துடன் இணைந்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இவருடைய கவிதைத் தொகுப்பு: ‘அலறல்களின் பாடல்’. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
Be the first to rate this book.