எழுத்துலகில் சிறுகதைகளின் பங்கு அளப்பரியது. தவிர்க்க முடியாதது. சிறுகதைகளை ஒரு வரம் என்று தான் நான் சொல்லுவேன். அவை பழுத்த சிந்தனைகளின் காட்சி வடிவங்கள் மற்றும் மனதின் அறைக்கூவல்கள்.
சிறுகதைகள் அகதரிசனங்களை ஒரு சில நிமிடங்களிலேயே நமக்கு தந்து விடுகின்றன. மனதிற்கு அப்பாற்பட்ட வெளிச்சங்களை கண்முன் போட்டு காட்டி விடுகின்றன. சில சமயத்தில் முகத்தில் அறைந்தும் விடுகின்றன.
இத்தகைய சிறுகதைகளை எழுதும் போது அதன் கருத்துருக்கள் சில நேரங்களில் நொடிப் பொழுதுகளில் நம்மை வந்தடைகின்றன. சில கருத்துருக்கள் எழுத ஆரம்பிக்கும் ஒரு புள்ளியிலேயே மறைந்து விடுகின்றன. ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் சில கருத்துருக்கள் முழுவதுமாக கிடைக்காமலேயே போய் விடுகின்றன. சில சமயங்களில் எழுத எழுதவே கருத்துருக்கள் முழுமையடைகின்றன. சில தருணங்களில் எதிர்பாராத விதத்தில் அவை தாமே திருப்பங்களை ஏற்படுத்தியும் கொள்கின்றன.
எண்ணத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடையே ஏற்படும் சிக்கலான உறவுகள் தான் சிறுகதைகளாக மலருகின்றன. நான் அடிக்கடி நண்பர்களிடையே சொல்வதுண்டு. சிறுகதைகளின் கருத்துருக்கள் எப்போதும் வானவீதியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. எழுத்தாளன் அவற்றை கண்ணுற்று பிடித்தெழுதி படிக்கும் நம்மையும் வானவீதிக்கு அழைத்துச் சென்று நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக இணைத்து ஒரு சில கணங்களேனும் நம்மையும் மிளிரச் செய்து விடுகிறான் என்று.
சிறுகதைகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவை வேறு வேறுபட்ட சிந்தனைகளை தூண்டி வெவ்வேறு மன பிரமிப்பையும் பிரமையையும் விரிவையும் உருவாக்கி விடுகின்றன. சில கதைகள் நாள் முழுதும் சிந்தனையில் ஓடுவதுண்டு. சில கதைகள் படித்த உடனேயே மறைந்து விடுவதும் உண்டு. சில சிறு கதைகள் மனதின் மையப் புள்ளியை கலைத்து விடுவதும் உண்டு. சில கதைகள் மனதின் பல்வேறு பரிமாணங்களை இணைத்து விடுவதும் உண்டு.
இந்த சிறுகதைகள் வெவ்வேறு தளங்களில் பயணிப்பவை. வெவ்வேறு வெளிகளுக்கு அழைத்துச் செல்பவை. வெவ்வேறு பார்வைகளை அகமுகமாக கூட்டக்கூடியவை.
-சிவசக்திவேல்
Be the first to rate this book.