பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம்.
1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய தொட்டால் தொடரும், கனவுகள் இலவசம் ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.
அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களுள் ஒன்று நீ மட்டும் நிழலோடு.
1980கள், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்திலிருந்த காலம். படிப்பு முடித்து கனவுகளோடு வந்தவர்களை காலம் கருணையே இல்லாமல் துன்புறுத்தியது. கனவுகள் பொய்த்துப் போகும் தருணங்கள் மிகவும் கொடுமையானது. அந்தக் கனவை, ஏமாற்றங்களை , போராட்டங்களை, குமரேஷ் என்ற இளைஞன் மூலமாக பட்டுக்கோட்டை பிரபாகர் தனக்கே உரித்தான ஈர்ப்பான நடையில் நம் பார்வைக்கு வைக்கிறார்.
காலம் காலமாக தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு. அந்த இடைய்வேலியால் உண்டாகும் மோதல்கள் இந்நாவலில் மிகவும் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.
1983ல் சாவி வார இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் படிக்கத் திகட்டாத வாசிப்பின்பத்தை அளிக்கிறது.
Be the first to rate this book.