“சொல்லாத சொல்லெடுத்துக் கவிபுனைய வேண்டும் சொல்லெல்லாம் சூரியனாய் ஜொலித்து வரவேண்டும்” என்கிற அவாவுடன் சுமார் நாற்பது ஆண்டுகளாக தன் கவிதைகளாலும் இசைப்பாடல்களாலும் நம் மனங்களுக்கு மிக நெருக்கமான ஓர் படைப்பாளுமையாக,வெக்கை மிகுந்த தர்மபுரிக் காட்டில் நின்று இப்பிரபஞ்ச வெளியெல்லாம் நோக்கிப் பாடும் ஒரு கவிஞர் நவகவி.
“புதுயுக நாயகரே இந்தியப் புரட்சியின் தூதுவரே வந்தேமாதரத் தாரக மந்திரம் மறுபடி இசைத்திட வாருங்கள்” என்று அவர் வரிகளைப் பாடும்போது கூட்டம் எழுந்து நின்று வந்தேமாதரம் என முழங்கத் துவங்கி இன்குலாப் ஜிந்தாபாத்தில் முடிக்கும். ஒரு பாடலுக்கு இத்தனை வலிமையா என்று அதிர்ந்து பார்த்திருப்போம் நாங்கள்.
அவர் த.மு.எ.க.ச.முன்னோடி என்பதாலும் ஊசலாட்டமில்லாத ஒரு மார்க்சிஸ்ட் ஊழியர் என்பதாலும் பொதுவான தமிழ்க் கவியுலகம் அவரையும் அவரது கவிமேன்மையையும் பெரிதாகக் கண்டுகொள்ளாது போனது கவியுலகிற்கு ஓர் இழப்பாகும். சோவியத்தின் மாயாகோவ்ஸ்கி போலத் தமிழில் நமக்கு வாய்த்த அருங்கவி, பெருங்கவி எம் தோழர் நவகவி.
Be the first to rate this book.