“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்” என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார்.
ஆனால், உண்மையில் அஹிம்சைக் கொள்கையும் தோல்வியடையவில்லை; மகாத்மா கடைப்பிடித்த முறையும் தோல்வி அடையவில்லை. நவகாளியில் மகாத்மா ஆரம்பித்த அஹிம்சா இயக்கம் புது டெல்லியில் ஜனவரி 30-ஆம் தேதி பூர்த்தியாயிற்று.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச்சுவைக் கட்டுரைகள் அல்ல; வெறும் பிரயாணக் கட்டுரைகளும் அல்ல; சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மீகக் கட்டுரைகள் ; காந்திஜியையும் அவருடைய ஜீவிய தர்மத்தையும் எல்லோரும் அறியத் தெளிவாக்கித் தரும் கட்டுரைகள் ; இலக்கியம் என்று சொல்வதற்குரிய ரஸமான கட்டுரைகள்.
தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டிலுள்ள காந்தி பக்தர்களுக்கும் ‘சாவி’ சிறந்த பேருதவி புரிந்திருக்கிறார்.
– கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
Be the first to rate this book.