இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைச் சாவி' அவ்வளவு சுலபமாக எழுதிவிடவில்லை. எவ்வளவோ கஷ்டங்களுக்குள்ளாகி, தூர தேசப் பிரயாணங்கள் செய்து திரும் பிய பிறகு மீண்டும் எவ்வளவோ பிரயாசை எடுத்துத்தான் எழுதினார். ஆனாலும் இந்தச் சிறு முன்னுரை எழுதுவதில் எனக்குள்ள கஷ்டம் சாவிக்கு இவ்வளவு கட்டுரைகளும் எழுதியதில் ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில், சாவி கட்டுரைகள் எழுதியபோது காந்தி மகாத்மா இந்த நில உலகத்தில் நடமாடிக் கொண்டிருந்தாா. இன்று அந்த மகானுடைய பூத உடல் மறைந்து விட்டது. சென்ற 1947-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் காந்தி மகான் நவகாளி ஜில்லாவில் கிராமம் கிராமமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். இந்த வருஷம் பிப்ரவரியில் மகாத்மா வானுலகில் இருக்கிறார். - 1946-ஆம் வருஷம் பிப்ரவரியில் இந்திய நாட்டின் பிதா நமது தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்த பிப்ரவரியில் அவருடைய ஆத்மா மேலுலகத்துக்கு விஜயம் செய்துவிட்டது. அவருடைய எரிந்த உடலின் சிறு துகள்கள் பற்பல நதிகளிலேயும், கடல் துறைகளிலேயும் கரைந்துவிட்டன. 'மகாத்மா சென்ற வருஷம் இந்த மாதத்தில் நாம் நடக்கும் பூமியிலே நடமாடினார்; இந்த வருஷம் இந்த மாதத்தில் அவருடைய திருமேனி இங்கில்லை என்று எண்ணும்போதெல்லாம் நம் வயிற்றில் ஏதோ பகீர் என்கிறது. நெஞ்சை ஏதோ வந்து அடைத்துக் கொள்கிறது. காந்தி மகான் காலமாகி நாள் இருபது ஆகியும் கலக்கம் சிறிதும் நீங்கவில்லை. தலைவர்கள் ஏதோ தைரியம் சொல்லுகிறார்கள்; ஆறுதல் கூறுகிறார்கள். நமக்குத் தைரியமும் பிறக்கவில்லை; ஆறுதலும் உண்டாகவில்லை. உலகம் சுழன்று கொண்டிருக்கிறது; வாழ்க்கை நடந்து மெள்ள ஆறுதலும் கொண்டிருக்கிறது. எனினும், ஜனவரி 30-க்கு முன்பு இருந்ததுபோல் இப்போது ஒன்றுமில்லை. எல்லாம் மாறுதலாகவே தோன்றுகிறது. இந்த மனோநிலைமையில் நவகாளி யாத்திரை' என்னும் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதும் கடமை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் - அருமையான சந்தர்ப்பம் - ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்; அதோடு அதிர்ஷ்டமும் வேண்டும்.
Be the first to rate this book.